சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
பழங்கால நாட்டுப்புறக் கலையான தோல்பாவைக்கூத்து தமிழ்நாடு மற்றும் கேரளாவில் குறிப்பாக பாலக்காடு, திருச்சூர், தேனி, தருமபுரி, கன்னியாகுமரி பகுதிகளில் இன்னும் உயிர்ப்போடு இருக்கும் பாரம்பரிய நிழல் பொம்மலாட்டக் கலையாகும். தோல் பொம்மைகளை (பாவை) ஆட்டி அவற்றின் நிழல் திரையில் தெரியுமாறு நடத்தப்படும் நாடகம் (கூத்து) இது. ஒளி, ஒலி, நிழல், இசை, உரையாடல் அனைத்தும் இணைந்த இக்கலை திரைப்படக்கலையின் முன்னோடி எனச் சொல்லலாம்.திருக்குறளில் (குறள் 1020) பாவைக்கூத்து பற்றிய தகவல் உள்ளதின் மூலம் இதன் தொன்மையை அறியலாம்.
கேரளாவில் பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களில் பகவதி கோயில்களில் கூத்துமடம் எனப்படும் நிரந்தர மேடை உள்ளது. இங்கு 7 முதல் 21 நாட்கள் வரை இரவு நேரங்களில் தோல்பாவைக்கூத்து நடத்தப்படுகிறது. ராமாயணம், மகா பாரதம் உள்ளிட்ட புராணக்கதைகள் தொடங்கி தற்போதைய சமூக நிகழ்வுகள் வரை இக்கலையின் மூலம் மக்களை ரசிக்க வைக்கின்றனர். ஒரு நிகழ்வில் 200 பொம்மைகள் வரை பயன்படுத்தப்படும் நிலையில் இதற்கென ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட ஆட்டுத்தோலே பயன்படுத்தப்படுகிறது.
உலகின் பழமையான கதைச் சொல்லல் கலைகளுள் ஒன்றான தோல்பாவைக்கூத்து இன்று அழிவின் விளிம்பில் உள்ளது. தொலைக்காட்சி,சினிமா, மொபைல் போன் போன்ற நவீன பொழுது போக்குகளின் தாக்குதல்களாலும் இளம் தலைமுறையினர் இக்கலையினை கற்க ஆர்வம் காட்டாத நிலையிலும், இதனை நம்பி உள்ள கலைஞர்களுக்கு உரிய வருமானம் இல்லாததாலும், போதிய பார்வையாளர்கள் இல்லாமலும் மெல்ல, மெல்ல நமது நிழலாய் இருந்த இந்நிழல்கலையை மெல்ல தொலைத்து வருகின்றோம்.
இக்கலையில் ஈடுபடும் கலைஞர்கள் இதனால் வேறு தொழிலுக்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இருப்பினும் தமிழ்நாட்டில் தருமபுரி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சில குடும்பத்தினர் தொடர்ந்து நடத்தி வரும் நிகழ்ச்சிகள் மூலமாய் இக்கலையினை தலைமுறையாக பாதுகாத்து வருகின்றனர். கேரளாவில் இதற்கென பயிற்சி மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் இதுகுறித்து அக்கறை காட்டப்படவில்லை. மேலும் சமீபத்தில் கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் தோல் பாவைக்கூத்து இடம்பெற்ற பொது நிகழ்ச்சிகள் நடந்தன. தமிழக- கேரள பண்பாட்டின் அடையாளமாக திகழும் இக்கலை சமூக ஒற்றுமை, பாரம்பரிய பாதுகாப்பு, கதைசொல்லல் பாரம்பரியத்தை தக்க வைக்கிறது
தோல்பாவைக்கூத்து என்பது வெறும் பொழுது போக்கு அல்ல, ஒரு சடங்கு, கல்வி, பண்பாட்டு பாதுகாப்பு ஆகும். மதம், இலக்கியம், இசை, நாடகம், கைவினை அனைத்தும் முழுமையாக இணைந்த கலை. எனவே இதனை காக்கும் வகையில் அரசு நிகழ்வுகள், சுற்றுலா விழாக்கள், கலாச்சார நிகழ்வுகள், பள்ளி விழாக்களில் இதனை இடம்பெற செய்திட வேண்டும். இதனையே நம்பி உள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, ஓய்வூதியம், வீடு மற்றும் கூத்துக்கு தேவையான பொருட்கள் தயாரிப்புக்கு உதவி செய்யப்பட வேண்டும். பயில்வோருக்கு இலவச பயிற்சி பட்டறைகள், அருங்காட்சியகம் உருவாக்குவதுடன் பள்ளி பாடத்திட்டங்களில் இதனை இடம்பெற செய்ய வேண்டும். சமூக பிரச்னைகளை மையமாக வைத்து இக்கலையின் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு கருத்துக்கள் எளிதில் கொண்டு செல்ல இயலும். தமிழ் பண்பாட்டின் அடிச்சுவடுகளான இக்கலை அழியாமல் காப்பது நமது கைகளில் தான் இருக்கிறது.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply