சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழகத்தின் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான 14 கடலோர மாவட்டங்களில் 1076 கி.மீ நீளம் கொண்ட கடற்கரையில் 608 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு 10.48 லட்சம் மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். உள்நாட்டு மீனவர்களையும் சேர்த்தால் சுமார் 30 லட்சத்திற்கும் மேல் வசிக்கின்றனர். மீன்பிடித்தல், முத்துக்குளித்தல், சங்கு வணிகம், உப்புத் தொழில் உள்ளிட்ட இச்சமூகத்தினர் செய்யும் தொழில்களின் அடிப்படையில் பட்டினவர், கரையர்,பரதவர், முக்குவர், செம்படவர், சவலக்காரர், ஓடக்காரர், குக வேளாளர், அரையர், நுளையர், அளவர், உப்பளவர், பட்டங்கட்டியர், வருண குலமுதலி, திமிலர் உள்ளிட்ட 27 உள்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த உள்பிரிவுகளை ஒருங்கிணைத்து பரதவர் சமூகம் என்ற பொதுப்பெயரில் வழங்கப்படாமல் உள்ள நிலையில் வாக்குகளை பெறுவதற்காக மட்டுமே இவர்களை பயன்படுத்தும் கட்சிகள் இவர்களுக்கான உரிய அரசியல் பிரதிநிதித்துவம் இதுவரை தரவில்லை. இது ஒருபுறமிருக்க கல்வி, தொழில், பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளபோதும், பாரம்பரிய கடல்சார்ந்த வாழ்வு முறையினை கொண்ட போதும் இதுவரை எம்.பி.சி/ஓ.பி.சி பட்டியலிலேயே உள்ளனர். இதனால் 108+ பிற ஜாதிகளுடன் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகளுக்காக இவர்கள் போராட வேண்டிய நிலையில் உள்ளனர்.
தமிழ்நாடு மீன்வளத்துறையின் ஆணையராக இருந்த பீலா வெங்கடேசன் 18.8.2016 அன்று அளித்த அறிக்கையின்படி மீனவர் சமூகத்தின் சமூக, பொருளாதார நிலையினை கருதி அவர்களை கடல்சார் பழங்குடியினர் என அறிவித்து அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். இதன்படி மீனவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பழங்குடியினர் இடஒதுக்கீட்டில் பயன்பெற முடியும். மேலும் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு கிடைக்கும். இவர்களின் கலாச்சாரம், வாழ்வாதாரம், கடல்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
பழங்குடியினர் என்னும் அந்தஸ்து வழங்குவதற்கான தேசிய அளவுகோல்களின் படி மீனவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை, கடல்மீது கொண்ட தொடர்பு, பொருளாதார பின்தங்கல் ஆகியவற்றை கொண்டு இருந்த போதும் இதுவரையில் மீனவர்களை கடல்சார் பழங்குடியினராக மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை. தமிழகத்தைப் போலவே கேரளா, கர்நாடகா.ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களின் குரல்களும் இதுவரை செவிசாய்க்கப்படாத நிலையே உள்ளது.
லட்சத்தீவு மற்றும் அந்தமான்/நிகோபார் தீவுகளில் வாழும் மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனால் இவர்கள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர். இதுபோலவே தங்களுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதும் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் இதனை தெரிவிக்கிறார்களே தவிர வெற்றி பெற்ற பின் தங்கள் வாக்குறுதிகளையும், மீனவர்களையும் மறந்து போகின்றனர். எனவே கண்ணீரோடு தண்ணீரில் தவிக்கும் நெய்தல் குடிமக்களின் நியாயமான இக்கோரிக்கையினை மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply