சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

காடுகள் அழிப்பால் அழிந்து வரும் அழகான இருவாட்சி பறவை இனம் காக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் அரிய இருவாட்சி (Hornbill) பறவை மற்றும் அதன் இயற்கை வாழ்விடம்

இருவாட்சி பெரியஉடல், நீண்ட வளைந்த அலகு, அதன்மேல் காஸ்க் எனும் கொம்பு அமைப்பு, பறக்கும்போது ஹெலிகாப்டர் போல் ஒலி எழுப்பும் சப்தம் கொண்ட அழகான பறவை இனமாகும். சில வகைகள் 95-130 செ.மீ நீளம், 5 அடி வரை இறக்கை விரிப்பு கொண்டவை. பெரிய அலகு கொண்டதால் ஹார்ன்பில் (Hornbill) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. 50 ஆண்டுகள் வரை வாழும் நீண்ட ஆயுள் கொண்டவை. இருவாட்சி ஒரு துணையுடன் வாழ்நாள் முழுவதும் இணைந்தே வாழும் தன்மை கொண்டவை.

உயரமான மரங்களில் இயற்கையான அல்லது மற்றப்பறவைகள் ஏற்படுத்திய பாதுகாப்பான, மறைவான பொந்தில் இவை வசிக்கின்றன. இனப்பெருக்க காலத்தில் பெண் பறவை பொந்துக்குள் நுழைந்ததும் ஆண்பறவை சிறிய செங்குத்து துவாரம் மட்டும் விட்டு ஏனைய பகுதிகளை மண், மரத்துண்டு உள்ளிட்டவற்றால் மூடி விடுகிறது. பாம்பு, பிற பறவைகள், வேட்டையாடிகளிடம் இருந்து பாதுகாக்க இவ்வழியினை கையாளுகின்றன.

அடைபட்ட பெண் பறவை தனது இறகுகளை உதிர்க்கிறது. இப்பறவை முட்டைகளை விட்டு 40 நாட்கள் வரை அடைகாக்கின்றன. குஞ்சுகள் வளரும் 6மாத காலம் வரை பெண் பறவை பொந்திலேயே இருக்கின்றன. இவைகளுக்கான உணவுகளை ஆண் பறவை கொண்டுவந்து கொடுக்கின்றன. பெண் பறவை இறகு முளைத்ததும் கூட்டை விட்டு வெளிவருகிறது. இக்காலகட்டத்தில் ஆண் பறவை இறக்க நேர்ந்தால் பெண் பறவை மற்றும் குஞ்சுகள் உணவின்றி இறக்கும் நிலையே உள்ளது.

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மலை இருவாட்சி, சாம்பல் இருவாட்சி, மலபார் புள்ளி இருவாட்சி, இந்திய சாம்பல் இருவாட்சி என்னும் 4 வகை இனங்கள் காணப்படுகின்றன. தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்களுக்கெனவும், சாலைகள், சுரங்கங்கள் அமைக்க பெரிய மரங்கள் வெட்டப்படுவதால் இவற்றின் வாழ்விடம் இழக்கப்படுகிறது. இவற்றின் அலகு, இறகுகளுக்கு என வேட்டையாடபடுவதால் இருவாட்சி பறவை இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.

இருவாட்சி பறவையின் காதல், குடும்ப வாழ்க்கை மற்றும் தனித்துவமான இனப்பெருக்க முறை வியக்க வைப்பதாக உள்ளது. கேரளம் மற்றும் அருணாசலப் பிரதேசத்தின் மாநில பறவையாக இவை திகழ்கின்றன. இப் பறவைகள் 70க்கும் மேற்பட்ட மரங்களின் விதைகளை பரப்பி வனத்தை புதுப்பிப்பதால் காட்டின் விவசாயிகள் என அழைக்கப்படுகின்றன. எனவே சுற்றுசூழலை பாதுகாக்க இத்தகைய பறவை இனங்களை பாதுகாக்க வேண்டும். இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ் Schedule. 1ல் உள்ள இருவாட்சி இனங்களை காக்க இந்தியாவின் முதல் இருவாட்சி பாதுகாப்பு மையம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைக்கப்படுகிறது. அதன் வாழ்விடங்கள் மீட்கவும், காடுகள் அழிவில் இருந்து காக்கவும் செய்தால் இருவாட்சி இன அழிவை தடுக்கலாம்.இந்த உலகம் எல்லா உயிரினங்களுக்கும் சொந்தமானது என்பதை நாம் உணர்வது எப்போது?

இருவாட்சி பறவை, ஹார்ன்பில் பறவை, காடுகள் அழிவு, வனவிலங்கு பாதுகாப்பு, மேற்குத் தொடர்ச்சி மலை பறவைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அரிய பறவை இனங்கள்
அழியும் பறவை இனங்கள் பாதுகாப்பு
இருவாட்சி ஹார்ன்பில் பறவை பாதுகாப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *