சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

திருவாரூர் மாவட்டத்தில் விவசாய விளைநிலங்கள் சோலார் மின் திட்டத்திற்காக கபளீகரம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

திருவாரூர் மாவட்டத்தில் சோலார் மின் திட்டத்திற்காக கைப்பற்றப்படும் விவசாய நிலங்கள்

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடந்த 2020ல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இங்கு விவசாயம் அல்லாத எவ்வித திட்டங்களும் நிறைவேற்ற அரசால் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பாசன வசதியுடன் கூடிய நஞ்சை நிலங்களில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் தனியார் மூலம் பெரிய அளவிலான தரைமட்ட சோலார் (சூரிய) மின்திட்டம் நிறைவேற்ற நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் நிறைவேற்றப்படுவதின் மூலம் உணவு உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் சோலார் பேனல்கள் அமைப்பதால் நிலவெப்ப அழுத்தம் அதிகரிப்பதோடு மழைபொழிவு பாதிக்கும். நிலத்தடி நீர் குறைவிற்கும் இது காரணமாகிறது. மேய்ச்சல் நிலங்கள் சுருங்குவதால் கால்நடைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படுவதோடு வழிதடங்கள் அடைபடுவதால் கால்நடைகளின் நகர்வுகள் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

களைக்கொல்லி பயன்படுத்துவதால் நிலத்தடி நீர் மாசுபாடு ஏற்படுவதோடு சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். சோலார் பேனல்கள் சூரிய ஒளியினை உறிஞ்சி வெப்பத்தை வெளியிடுவதால் இரவு காலங்களில் வெப்பநிலை 3-4°C வரை அதிகரிக்கும் நிலை உள்ளதால் பருவ சமநிலை பாதிக்கப்படுகிறது. விவசாய விளைநிலங்கள் அழிக்கப்பட்டு உருவாக்கப்படும் இத்திட்டம் உயிர் பன்மைக்கு பேராபத்தையே உருவாக்கும்.

பெரிய அளவிலான சோலார் திட்டம் மூலம் பசுமை எரிசக்தி வழங்கப்படுவது வரவேற்க தக்கதாய் இருந்தாலும் அவை அமைக்கப்படும் இடத்தை பொறுத்து பல்வேறு எதிர்மறை விளைவுகளையும் நாம் எதிர்கொண்டே ஆகவேண்டி உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டம் பெருகவாழ்ந்தான் கிராம மக்கள் தொடர்ந்து போராடி தங்கள் எதிர்ப்பினை வெளிபடுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும் இவர்களது குரல்கள் கண்டுகொள்ளப்படாத நிலையே நீடிக்கிறது.

பெருகிவரும் மின்தேவையினை பூர்த்தி செய்ய சுற்றுசூழலுக்கு மாசுபடுத்தாத சோலார் மின்திட்டங்கள் தேவை என்றாலும் அத்தகைய திட்டங்களை நிறைவேற்ற விவசாய விளைநிலங்களை கபளீகரம் செய்வதை ஏற்றுக்கொள்ள இயலாது. இத்தகைய திட்டங்கள் செயல்படுத்திட இதுவரை சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு (ElA), வெப்ப மதிப்பீடு, நிலத்தடி நீர் ஆய்வு, கிராமசபை ஒப்புதல், பொதுமக்கள் கலந்தாய்வு இதுவரை நடைமுறைபடுத்தப்படவில்லை. பொதுமக்கள் பாதிப்பை தவிர்க்கும் வகையில் இதனை அரசு ஆய்வு செய்து நடைமுறைபடுத்துவதோடு விவசாய நிலங்கள் அல்லாத பகுதியில் இத்திட்டத்தினை நிறைவேற்றுவதின் மூலம் பல்வேறு இழப்புகளையும், இன்னல்களையும் தவிர்க்கலாம்.

திருவாரூரில் விவசாய நிலங்கள் சோலார் திட்டத்திற்காக கைப்பற்றப்படுமா? – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு
திருவாரூர் விவசாய நிலம், சோலார் மின் திட்டம் தமிழ்நாடு, காவிரி டெல்டா பிரச்சனை, விவசாய நில அழிவு, சுற்றுச்சூழல் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *