சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

அறிவிக்கப்பட்டு 60 ஆண்டாகியும் நிறைவேற்றப்படாமல் முடங்கிய ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

60 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள ஆனைமலையாறு – நல்லாறு திட்டம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் 8 நதிகளின் குறுக்கே அணைகள் கட்டி கிழக்கு நோக்கி திருப்பி பாசனம், குடிநீர், மின்உற்பத்திக்கு பயன்படுத்துவதே பரம்பிகுளம்-ஆழியாறு பாசனத் திட்டம். தமிழக முதல்வராக பெருந்தலைவர்.காமராஜர் இருந்தபோது 1958 நவம்பர் 9ந்தேதி இத்திட்டத்தின்படி இருமாநிலங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 1961ல் அப்போதைய பிரதமர் நேருவால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

குறிப்பிட்ட ஒப்பந்தத்தின் படி பரம்பிகுளம், மேல் ஆழியாறு, ஆழியாறு, மேல்நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, துணைக் கடவு, பெருவாரிப் பள்ளம், திருமூர்த்தி, இடைமலையாறு, ஆனைமலையாறு, நல்லாறு ஆகிய 12 அணைகள் கட்டபடவேண்டும். இவற்றில் அநேக அணைகளின் பணிகள் காமராஜர் ஆட்சிக்காலத்தில் முடிந்தன. சோலையாறு, நீராறு பணிகள் கருணாநிதி முதல்வராக இருந்த 1970ல் நிறைவடைந்தது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 50 டி.எம்.சி நீர் கிடைக்கும் எனவும் இதில் தமிழக பங்காக 30.5 டி.எம்.சி நீரும் கேரளாவிற்கு 19.5 டி.எம்.சி நீரும் பங்கிடலாம் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படாத நிலையில் உள்ளன. ஆனைமலையாறு மற்றும் அதன் துணை ஆறான இட்டலியாறு மூலம் கிடைக்கும் 2.5 டி.எம்.சி நீரை பயன்படுத்துவதே ஆனைமலையாறு திட்டம். இதன்படி இட்டலியாற்றின் குறுக்கே அணை கட்டி 5கி.மீ நீளமுள்ள சுரங்கபாதை மூலம் கீழ நீராறுக்கு எடுத்து சென்று சோலையாறு, பரம்பிக்குளம் அணை வழி ஆழியாறு, திருமூர்த்தி அணைக்கு எடுத்து செல்வதே இதன் செயல் திட்டம். இதற்கு கேரள அரசு ஒப்புதல் தேவை. கேரளாவில் இடைமலையாறு அணை கட்டி முடித்ததும் ஆனைமலையாறு அணை கட்டவேண்டும் என்பது ஒப்பந்த உறுதிமொழி. இதன்படி கடந்த 1987ல் குறிப்பிட்ட அணையினை கட்டி முடித்த போதும் தமிழக ஆண்ட, ஆளும் கட்சிகள் ஆனைமலையாறு திட்டத்தை செயல்படுத்த அக்கறை காட்டவில்லை.

மேல நீராற்றில் இருந்து 14.40 கி.மீ தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைத்து நல்லாறு பகுதிக்கு கொண்டுவந்து அங்கிருந்து 4கி.மீ தொலைவுக்கு கால்வாய் அமைத்து காண்டூர் கால்வாயடன் இணைத்து திருமூர்த்தி அணைக்கு நீரை கொண்டு செல்வதே நல்லாறு அணைத்திட்டம். இதற்கு கேரள அரசின் அனுமதி தேவையில்லை. இருந்தும் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் இத்திட்டமும் முடங்கிய நிலையிலேயே உள்ளது. இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கு 9 டி.எம்.சி நீர் கிடைக்கும். மேலும் 250 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய இயலும். ஒப்பந்தபடி கேரளாவிற்கு 19.5 டி.எம்.சி நீரை நாம் வழங்கி வரும் நிலையில் நமக்கு கிடைக்க வேண்டிய நீரை நாம் பயன்படுத்த தவறியதின் விளைவாக 4.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற இயலாத நிலை உள்ளது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் விவசாய தேவைக்கும், குடிநீர் தேவையினை பூர்த்தி செய்வதற்கும் இத்திட்டம் பெரிதும் உதவும். மேலும் விவசாயத்திற்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் நீரை ஆண்டுதோறும் வழங்க செய்வதால் நீர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதோடு, நிலத்தடி நீர் ஆதாரத்தையும் உயர்த்தலாம்.ஆனால் தேர்தல் தோறும் வேட்பாளர்களும், கட்சிகளும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என்கிறார்கள். அதன்பின் மறந்தே போகிறார்கள். இதனால் இத்திட்டம் கானல் நீராகவே உள்ளது. விவசாயிகள் நலன்கருதி இத்திட்டம் நிறைவேற்றிட வேண்டியது அவசர, அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *