சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் திகழ்கிறது. இந்நிலையில் தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கேட்டு இக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக பொறுப்பு ஆளுனர் விசுவநாத் அர்லேக்கரை சந்தித்து 6.5.26 அன்று சந்தித்து கடிதம் அளித்து உள்ளார்.
இதைத் தொடர்ந்து சட்டபேரவை உறுப்பினர்கள் 118 பேர் ஆதரவு கடிதம் அளித்தால் தான் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அனுமதிக்க இயலும் என ஆளுனர் நிபந்தனை தெரிவித்து விஜய் கோரிக்கையினை நிராகரித்து உள்ளார். இத்தகைய செயல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும், மக்களின் தீர்ப்பிற்கும் எதிரானது. பொதுவாக அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டவர்களை ஆளுனர் அழைப்பதும், பெரும்பான்மையினை சட்டபேரவையில் நிரூபிப்பது இதுவரையில் பின்பற்றப்படும் நடைமுறையாகும்.
சட்டபேரவையில் மெஜாரிட்டி நிரூபிக்க கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்ட முக்கிய சம்பவங்கள் இந்திய அரசியல் வரலாற்றில் பல உள்ளன. சட்டபேரவைத் தேர்தலில் 108 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதும் சிறப்பு பாதுகாப்பு படையினை அனுப்பியதும், அமைச்சரவை பதவி ஏற்பு விழா ஏற்பாடுகளை உயர்அதிகாரிகள் மேற்கொண்டதும் இதே ஆளுனர் தான். ஆனால் காங்கிரஸ் கட்சி தவெ.கா விற்கு தனது ஆதரவு தெரிவித்ததும் ஆளுனர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது அவரது எண்ணத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. இத்தகைய ஜனநாயக மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றோம்.
எஸ்.ஆர்.பொம்மை வழக்கு (S.R.Bommai Vs. Union of India 1994) இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் மிக முக்கியமான தீர்ப்பாகும். 1988 ல் கர்நாடகாவில் ஜனதா தளம் கட்சியின் தலைமையில் எஸ்.ஆர். பொம்மை முதல் அமைச்சராக இருந்தார். 1989 ஏப்ரலில் சில எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ் பெற்றதால் ஆளுனர் அறிக்கை அனுப்பினார். இதன்பேரில் மத்திய அரசு பிரிவு 356ஐ பயன்படுத்தி பொம்மை அரசை கலைத்து குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது. பொம்மை உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இதன் பேரின் 11 மார்ச் 1994 அன்று 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமைப்பு பெஞ்ச் தீர்ப்பு அளித்தது. இதன்படி முதல் அமைச்சருக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை சட்டபேரவையில் சோதிக்க வேண்டும். ஆளுனர் அல்லது மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடாது என தெரிவித்தது. இத்தகைய உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மக்கள் முடிவினை ஏற்று த.வெ.கா வை பொறுப்பேற்று அமைச்சரவை அமைக்க ஆளுனர் அழைக்க வேண்டும். உரிய பெரும்பான்மையினை சட்டபேரவையில் நிரூபிக்க அவர் காலவரம்பு வழங்கிட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply