சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

அழகான தோற்றம் அளிக்கும் அழிந்துவரும் பொன்வண்டு இனம் காக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழ்நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள அழகிய பொன்வண்டு இனத்தை காட்டும் காட்சி

உலகில் உள்ள பூச்சி இனங்களில் சுமார்40% அழியும் அபாயத்தில் உள்ளன. ஆய்வுகளின் படி 5 லட்சம் பூச்சி இனங்கள் அழிந்து வருவதாக கூறுகிறது. பாலூட்டிகள் மற்றும் பறவைகளை விட பூச்சிகள் 8 மடங்கு வேகத்தில் அழிவது சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுவதாக உள்ளது. பூச்சிகள் சுற்றுச்சூழலில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மகரந்த சேர்க்கை, இயற்கை குப்பை அழிப்பு, உணவு சங்கிலியில் பங்கேற்பு என பல்வேறு பணிகளைச் செய்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 79 பூச்சி இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.

பெரியோர்கள் தங்கள் சிறுவயதில் பொன்வண்டு என்னும் பூச்சியை நூல் கட்டி விளையாடியதை இளந்தலைமுறையினர் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை. அந்தவகையில் கண்ணுக்கு அழகாக இறக்கை விரித்து பறக்கும் பூவைப்போல மின்னும் உலோகம் என தங்கம், பச்சை, சிவப்பு நிறங்களில் காட்சி அளிக்கும் பொன்வண்டு இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. Buprestidae குடும்பத்தைச் சேர்ந்த Sternocera இன இவ்வகை வண்டுகள் இப்போது அரிதாகவே கண்களில் தென்படுகின்றன.

இப்பொன்வண்டுகள் உயிரியல் சமநிலையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றின் லார்வாக்கள் மரங்களில் வாழ்ந்து சில புழு இனங்களை கட்டுபடுத்த உதவுகின்றன. இவை மழைக்காலங்களில் வளரும் களைகளை கட்டுபடுத்துகின்றன. இதன் வாழ்க்கை முட்டை- புழு (லார்வா), கூம்பு (பியூபா), வயதுவந்த வண்டு என 4 நிலைகளில் சுமார் 2 ஆண்டுகளில் நடக்கிறது. ஆனால் வயதுவந்த பொன்வண்டுகள் ஆயுட்காலம் 1 முதல் 4 வாரங்கள் மட்டுமே.

பொன் வண்டுகள் இலந்தை மர இலைகளை விரும்பி உண்ணும்.நகர்புற வளர்ச்சி, காடு அழிப்பு, பணபயிர் மரங்கள் பயிரிடுவதற்கென நமது கொடுக்காபுளி, இலந்தை உள்ளிட்ட பாரம்பரிய பரங்கள் அழிப்பு, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு, காலநிலை மாற்றத்தால் பருவம் தவறிய மழை மற்றும் வறட்சி உள்ளிட்ட காரணங்களால் இவ்வகை இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.இத்தகைய கண்கவர் பொன்வண்டின் இருப்பு சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் அறிகுறி.

இந்தியாவில் தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்குவங்கம், மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் வாழும் பொன்வண்டு மரங்களை அழிக்கவில்லை.மாறாக மரங்களின் இழப்பால் இவ்வகை இனங்களை இழந்து வருகிறோம். எனவே அழகிய இவ்வகை உயிரினத்தை அழிவில் இருந்து காப்பது அனைவரின் கடமையாகும். பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த இவற்றின் அழிவு ஏனைய உயிரினங்களின் சமநிலையினையும் பாதிக்கும். எனவே இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதோடு, ரசாயன பயன்பாட்டை குறைக்கவும், இலந்தை உள்ளிட்ட மரங்களை நடுவதோடு, நமது பாரம்பரிய மர இனங்களை கொண்ட பசுமைப் பகுதிகளை ஏற்படுத்திடவும், இவற்றின் முக்கியத்துவத்தை இளம் தலைமுறையினரிடம் அறிந்து கொள்ள செய்வது சுற்றுச்சூழலுக்கு நாம் செய்யும் நன்மையாகும்.

சுற்றுச்சூழல் & பல்லுயிர் பாதுகாப்பு
nvironmental awareness insects
தமிழ்நாடு சுற்றுச்சூழல் செய்திகள்
பல்லுயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு
அழிந்து வரும் உயிரினங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *