சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பஞ்சப்பட்டி கிராமம் பகுதியில் உள்ளது பஞ்சப்பட்டி ஏரி. வீராணம், காவேரிப்பாக்கம் ஏரியினை அடுத்து தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரியாக இது திகழ்கிறது. 1837ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த ஏரி சுமார் 1300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 2 டி.எம்.சி வரை இங்கு நீரை சேமிக்க இயலும்.
கடவூர் மலைப்பகுதி மற்றும் திண்டுக்கல் மாவட்ட வனப்பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து வரும் காட்டாற்று வெள்ளம் புங்காறு, பாலவிடுதி, தரகம்பட்டி, மைலம்பட்டி வழியாக வரும் நீர் இப்பகுதிக்கு வருகிறது. 1837ல் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தில் இங்குள்ள பல கிராமங்கள் நீரில் மூழ்கியதால் இதனை நிவர்த்தி செய்திட வெள்ளத்தை தடுக்கவும், பாசன பயன்பாட்டிற்காகவும் பஞ்சப்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது. இதனை சுற்றி உள்ள 24 ஏரிகள் 124 குளங்கள் நிரம்பிய பின் உபரிநீர் இங்கு வரும்.
இந்த ஏரியின் மூலம் இதனை சுற்றி உள்ள வெள்ளியனை, மேட்டுப்பட்டி, போத்து ராவுத்தன்பட்டி, சிவாயம், பாப்பக்காபட்டி, தரசம்பட்டி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பயன்பெற்று வந்தன.மேலும் சுற்றுவட்டாரப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததுடன், மக்களின் நீர் தேவை பூர்த்தியானது. பஞ்சப்பட்டி ஏரி நிரம்பிய பின் அதன் உபரிநீர் தென்கரை வாய்க்கால் வழியாக திருச்சி மாவட்டம் குடமுருட்டி அருகே காவிரி ஆற்றில் கலக்கும்.
பஞ்சம் நிறைந்த ஊர் என்பதால் இப்பகுதிக்கு பஞ்சப்பட்டி என பெயர் வந்ததாகவும் குறிப்பிட்ட ஏரி அமைக்கப்பட்ட பின் இப்பகுதியில் விவசாயம் அதிக அளவில் நடைபெற்றதால் செழிப்பு அடைந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஏரி நிரம்பினால் அதன் பரப்பு கடல்போல் காட்சி அளிக்கும். ஆனால் இன்றோ கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காய்ந்த நிலமே காட்சி அளிக்கிறது. பருவமழை குறைவு, நீர் வரத்து கால்வாய்கள் பராமரிப்பு இன்மை உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2001 க்கு பின் பஞ்சப்பட்டி ஏரி வறண்ட நிலையில் உள்ளது.
ஏரியின் பெரும்பாலான பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளதால் முட்புதர்காடுகளாக காட்சி அளிக்கிறது. காவிரி உபரி நீரை மாயனூர் அணை வழியாக குழாய் மூலம் பஞ்சப்பட்டி ஏரிக்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இருந்தும் குறிப்பிட்ட துறையினர் உரிய அக்கறை காட்டாததால் விவசாயிகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகுதி விவசாயம், நிலத்தடி நீர், சுற்றுச்சூழல், மக்கள் நலன், வாழ்வாதாரம் மேம்பட கால் நூற்றாண்டு காலமாக காய்ந்த நிலையில் காட்சி அளிக்கும் ஏரிக்கு நீர் வருவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply