சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

மதுரையில் ஆறாக இருந்து கழிவுநீர் சேறாக மாறிய கிருதுமால் நதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

மதுரையில் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் மாசடைந்த கிருதுமால் நதி

நாகமலை அடிவாரம் துவரிமான் பகுதியில் உற்பத்தியாகும் கிருதுமால் நதி மதுரையின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது. இதன் மூலம் 73 கண்மாய்கள் பாசனம் பெறுவதோடு இதை நம்பி பல்லாயிரகணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பயன் பெற்று வந்தன. வைகையின் துணை நதியாக அரிகேசரி கால்வாய் மூலம் இணைக்கப்பட்டு சுமார் 80 கி.மீ பயணித்து சிவகங்கை, விருதுநகர், ராமனாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின் தாகத்தை தீர்த்த இந்நதி தற்போது தனது அடையாளத்தையும், அழகையும் இழந்த நிலையில் உள்ளது. 120 அடி அகலம் இருந்த இந்நதி மதுரையில் தற்போது பல இடங்களில் 10 அடிக்குள் சுருங்கிவிட்டது.

மதுரை மாநகரின் கழிவுநீர் இந்த ஆற்றில் 8 பகுதிகளில் கலக்கிறது. மேலும் இந்த ஆற்றில் குப்பை, பிளாஸ்டிக், இறைச்சிக்கழிவுகள் குவியலாக காட்சி அளிக்கிறது. கழிவுநீர் கலப்பாலும், குப்பை கொட்டப்படுவதாலும் விராட்டி பத்து, பொன்மேனி, எல்லீஸ்நகர், கீரைத்துறை, சிந்தாமணி உள்ளிட்ட நகரின் பல இடங்கள் மோசமான நிலையில் துர்நாற்றம் வீசி வருவதோடு இதனால் சுகாதார சீர்கேடும், தொற்றுநோய்களும் உருவாகும் அவலநிலையில் உள்ளது. ஆக்கிரமிப்புகள் ஒருபுறம், கழிவுகள் மறுபுறம் என கிருதுமால் நதி சிதைக்கப்படுவதால் தனது ஜீவிதத்தை இழந்து வருகிறது.

மதுரையில் மட்டும் கடந்த 40 வருட காலத்தில் பல்வேறு கண்மாய்கள் களவுபோனது. 1980 வரையில் இவை தங்களுக்குள் ஒரு தொடர்பை கொண்டு இருந்ததோடு இதனை நம்பி இருந்த மக்களுக்கு பெரிதும் பலன் அளித்து வந்தது. காக்க வேண்டிய இடத்தில் உள்ள உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசு துறைகளே அதிகார துஷ்பிரயோகம் செய்ததின் விளைவாக சுமார் 50 கண்மாய்கள் அபகரிக்கப்பட்டன. இந்த பட்டியலில் கிருதுமால் நதியும் உள்ளதோடு ஆறாக இருந்தது தற்போது கழிவுநீர் தேங்கி சேறாக காட்சி அளிப்பதோடு நகரின் கழிவுநீர் வடிகாலாக மாறிப் போனது.

மதுரை உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட இந்த ஆற்றில் டிஜிட்டல் சர்வே செய்து எல்லைகளை நிர்ணயிக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும் உத்தரவிட்டது. இதுபோல் பசுமைத் தீர்ப்பாயமும் கிருதுமால் நதியில் நகரின் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. ஆனால் மாநகராட்சி எதனையும் கண்டு கொள்ளாத நிலையில் உள்ளதால் தொடர்ந்து கழிவுநீர் கலப்பதும், கழிவுகள் கொட்டப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. ஆற்றங்கரையில் நாகரிகங்கள் பிறந்தது வரலாறு. ஆனால் நகரங்களால் ஆறுகள் உயிர் இழப்பது இப்போதைய நிலையாக உள்ளது.

என்ன தான் நீதிமன்றங்கள் சொன்னாலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாத வரையில் இதுபோன்ற நீர்நிலைகளை காப்பது இயலாத காரியம். கடந்த 2020 ல் இந்த ஆற்றில் தூர்வார குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் யானைப்பசிக்கு சோளப்பொறி போல் இதனால் முழுமையாக தூய்மைபடுத்தப்படவில்லை. மொட்டைகலுங்கு பகுதியில் இருந்து நீரை திருப்பிவிடப்படுவதால் கிருதுமால் நதியில் நீர்வரத்து தடைபடுகிறது. எனவே நகர கழிவுநீர் மற்றும் கழிவுகள் இந்நதியில் கலப்பது முழுமையாக தடைசெய்ய வேண்டும். மேலும் இதன் ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், சுத்தப்படுத்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு கிருதுமால் நதியினை காக்க மக்களே கரையாக நின்று கைகோர்த்திட வேண்டியது அவசர அவசியம்….

மதுரையில் கழிவுநீராக மாறிய கிருதுமால் நதி: சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு
கழிவுநீர் கலப்பால் சீரழியும் கிருதுமால் நதி: மதுரையில் அதிர்ச்சி
மதுரையின் முக்கிய நீராதாரம் கிருதுமால் நதி மாசுபாட்டில் சிக்கியது
கிருதுமால் நதியில் கழிவுநீர் கலப்பு: ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
ஆறாக இருந்த கிருதுமால் நதி இன்று கழிவுநீர் வடிகாலாக மாறியது
கிருதுமால் நதியை காப்பது எப்போது? மதுரையில் தொடரும் கழிவுநீர் கலப்பு
குப்பை மற்றும் கழிவுநீரால் சீரழியும் கிருதுமால் நதி
மதுரையில் கிருதுமால் நதி மாசுபாடு: நீர்வள பாதுகாப்புக்கு அவசர நடவடிக்கை தேவை
கிருதுமால் நதியின் அகலம் சுருங்கி கழிவுநீர் தேங்கும் அவலம்
கிருதுமால் நதியை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சமூக பொதுநல இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *