சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வெள்ளை உடையில் தலையில் டர்பன் அணிந்த நிலையில் காட்சி அளிப்பவர் தபேதார். மேயர், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல இடங்களிலும் இவர்களை பார்த்திருப்போம். இதுபோலவே நீதிமன்றங்களில் உள்ள பணியாளர் தோள் பட்டையுடன் குறுக்காக சிவப்பு பட்டை அணிந்து காட்சி அளிக்கும் நிலையில் டவாலி என அழைக்கப்படுகிறார். உயர் அதிகாரிகளுக்கு ஒளிவட்டத்தை ஏற்படுத்துவது, அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்ட தலைமைப்பீடத்தில் உள்ளவர்களின் நிழலாய் இருப்பது தான் இவர்களது தலையாயப்பணி. இத்தகைய நடைமுறை பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை.
உயர் அதிகாரிகளின் அந்தஸ்தை குறிக்கும் அடையாளமாய் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இப்பணி இடத்தை வெள்ளையர்களை விரட்டிய பின்பும் இத்தகைய நடைமுறையினை விரட்டாமல் கடைபிடித்து வருகின்றோம். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்பும் இத்ததைய அடிமை சிந்தனையில் இருந்து இன்னும் விடுபடாமல் இருந்து வருகிறோம். ஜனநாயகத்திற்கும், சமத்துவத்திற்கும், மனித உரிமைக்கும், சுயமரியாதைக்கும் எதிரானது என்ற போதும் அதனை விலக்காமல் பாதுகாத்து வருகிறோம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 150 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் டவாலி 2022ல் நியமிக்கப்பட்டார். இதுபோலவே ஆண்களே நியமிக்கபட்டு வந்த தபேதார் பணி இடத்தில் 2024 ல் முதல் பெண் பணியாளர் மாதவி என்பவர் நியமிக்கப்பட்டார். இவ்வாறு சமத்துவத்தை கொண்டு வந்ததாய் நாம் கூறினாலும் ஆண்டான் அடிமை காலத்தில் நாம் வாழ்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும். இதுபோலவே காவல்துறையில் ஆர்டர்லி பணியில் உயர்அதிகாரிகள் வீட்டில் அடிமைகளாய் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக கண்காணிக்க மாவட்ட அளவில் குழுவினை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சமூக சமத்துவத்திற்கு எதிரான இத்தகைய அடிமைத்தனத்திற்கு எதிராக தஞ்சாவூர் முன்னாள் ஆட்சியர் சண்முகம், முன்னாள் நீதிபதி சந்துரு உள்ளிட்ட ஒருசிலர் முன்மாதிரியாய் செயல்பட்டு உள்ளனர். இருந்தும் நமது ஆட்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டதாய் இந்த அடிமை சாசனம் அமைந்து விட்டபடியால் இப்பணி நியமனங்கள் நம்மால் ஏற்றுக்கொள்ளபடாத போதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
மரபு என்ற பெயரில் அடிமைபடுத்துவதை நாம் இன்னும் எவ்வளவு காலம் ஏற்றுகொள்ளப்போகிறோம்? காலத்திற்கும், நாகரிக சமூகத்திற்கும் ஒவ்வாத பணிகளை ஏன் இன்னும் தொடர வேண்டும்? வெள்ளையர்கள் விட்டு சென்ற பின்பும் இத்தகைய பணிகளால் நம்மையே நாம் சிறைவைப்பது நியாயமா? இத்ததைய எச்சங்களில் இருந்து எப்போது நாம் விடுதலை அடையப் போகிறோம்?
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply