சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

வாசிப்பை மேம்படுத்திடும் புத்தகப்பூங்கா திட்டம் நிறைவேற்றிட வேண்டும். சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் தமிழக புத்தகப்பூங்கா திட்டம்

தமிழ்நாட்டில் மாவட்ட அளவிலான புத்தக கண்காட்சிகள் பள்ளிகல்வித்துறை, பொதுநூலகத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இத்திட்டத்தினை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதன்படி தற்போது சென்னையில் 49வது புத்தக கண்காட்சி இம்மாதம் 8ந்தேதி முதல் 21ந்தேதி வரை நடக்கிறது. மேலும் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா வரும் 16 முதல் 18 ந்தேதி வரை நடக்கிறது.

மாவட்டங்களில் குறிப்பிட்ட நாட்களில் தற்காலிகமாக புத்தக கண்காட்சி நடைபெறும் நிலையில் சென்னை கன்னிமாரா நூலகத்தில் நிரந்தர புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் முதல் மற்றும் தனித்துவமான முயற்சியாக கருதப்படும் இத்திட்டத்தினை 2021ல் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். இதற்கென அரசு வருடத்திற்கு ரூ 75 லட்சம் ஒதுக்கீடு செய்து வரும் நிலையில் இதன்மூலம் ஏராளமான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இதற்கு முன்னோடியாக அனைத்து வகை புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்திடும் வகையில் புத்தகப்பூங்கா திட்டம் நிறைவேற்றப்படும் என முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால் அது அவரது காலத்தில் நடைமுறைக்கு வரவில்லை. இத்திட்டத்தினை தங்களது ஆட்சிகாலத்தில் நிறைவேற்றுவோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022 மார்ச் மாதத்தில் தெரிவித்தார். இதற்கென இடம் தேர்வு செய்யப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில்நிலையத்தில் இந்திட்டத்தின்படி ரூ 1.85 கோடி செலவில் மெகா புத்தக பூங்கா அமைக்கப்பட்டு கடந்த ஜூன் 2025 ல் முதல்வரால் திறந்துவைக்கப்பட்டது. 5000 தலைப்புகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு இடம்பெற்று உள்ளன. 50 க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் ஸ்டால், வாசிப்பு இடம், காஃபே, இலவச வை-பை வசதியுடன் இவை செயல்பட்டு வருகிறது. வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்ட இச்சீரிய முயற்சி பாராட்டிற்கு உரியது. ஆனால் எல்லா தரப்பினரும், அனைத்து பகுதி மக்களும் இவ்வசதியினை பயன்படுத்திட இயல்வதில்லை.

ஆகவே தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புத்தக பூங்கா திட்டத்தினை விரிவுபடுத்திட வேண்டும். புத்தகங்கள் விற்பனையுடன் இதன் நோக்கத்தினை முடக்கி விடாமல் இவ்வளாகத்தில் நூல் ஆசிரியர்கள் மற்றும் பதிப்பாளர்கள் தங்கள் நூல்களை வெளியிடவும், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் படைப்பாளர்கள் கருத்துரை ஆற்றும் வகையில் அரங்கமும் ஏற்படுத்திட வேண்டும். இதன்மூலம் புத்தக பூங்கா மூலம் வாசிப்பு சிந்தனையினை மேம்படுத்துவதோடு, இலக்கியம், வரலாறு, கலாச்சாரம் மற்றும் மொழி குறித்து சிந்திக்கவும், படைப்பாளர்களை வெளிச்சப்படுத்தவும், புதிய பல படைப்பாளர்களை உருவாக்கவும் இத்திட்டம் தொடக்கமாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *