சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
உலகின் மிகப்பழமையான ஆரவல்லி மலைத்தொடர் சுமார் 200 கோடி ஆண்டுகள் வயது கொண்டவை. புரோட்ட ரோசோயிக் காலத்தை சேர்ந்ததாக சொல்லப்படும் இம்மலை டைனோசர்கள் தோன்றுவதற்கு முன்பே உருவானவை. 670 கி.மீ நீளம் கொண்ட இம்மலை டெல்லி அருகே தொடங்கி தெற்கு ஹரியானா, ராஜஸ்தான் வழியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முடிவடைகிறது. இம்மலைத் தொடரில் 3 புலிகள் காப்பகங்கள், 22 வனவிலங்கு சரணாலயங்கள், யுனெஸ்கோவின் பாரம்பரிய தலங்கள், பல மதத்தவரின் புனித தலங்கள் உள்ளன.
இந்த மலை அரணாக நின்று தார் பலைவனம் விரிவடையாமல் தடுப்பது, குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லியில் மழை பொழிவை தருவது, சம்பல், சபர்மதி, லூனி நதிகளின் பிறப்பிடமாகவும் ஆரவல்லி அமைந்து உள்ளது. சுற்றுசூழல் முக்கியத்துவம் வாய்ந்த ஆரவல்லி மலைக்கு அங்கு புதைந்து உள்ள கனிமவளங்களான காரியம்/வெள்ளி, துத்தநாகம், தாமிரம், தங்கம், கிரானைட், டங்ஸ்டன் உள்ளிடவற்றால் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது.
இந்த மலை தொடர்பான வழக்கில் கடந்த நவம்பர் 20 ந்தேதி உச்சநீதிமன்றம் ஆரவல்லி மலைகள் குறித்து தெளிவான வரையறை கேட்டதற்கு மத்திய அரசு 100 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட குன்றுகள் மட்டுமே ஆரவல்லி மலைகளாக கருதப்படும். அதேபோல் இரு குன்றுகளுக்கு இடையே உள்ள இடைவெளி 500 மீட்டருக்குள் இருந்தால் மட்டுமே அப்பகுதி ஆரவல்லி மலைத்தொடரின் பகுதியாக கருதப்படும் என தெரிவித்து உள்ளது. இந்த விநோத வரையறையை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு உள்ளது.
இத்தகைய முடிவினால் முக்கியத்துவம் வாய்ந்த ஆரவல்லியின் பல பகுதிகள் இனி பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்ற அந்தஸ்தை இழக்கும் அபாயநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. சுரங்க பணிகள், ரியல் எஸ்டேட் மற்றும் கார்பரேட் களவாணிகளுக்கு ஆரவல்லியை தடையின்றி திறந்து விடுவதற்கே இது வழிவகுத்து உள்ளது. இத்தகைய தவறான முடிவால் ராஜஸ்தான், டெல்லி மற்றும் வடஇந்தியாவின் பெரும்பகுதி கடும் சுற்றுசூழல் பாதிப்பை சந்திக்க நேரிடும். நீர்நிலைகள் தொலைவதற்கும் காற்று மாசு கொள்வதற்கும், பாலைநிலம் பரவுவதற்கும் இடமளிக்கும்.
பல சிறிய குன்றுகளை உள்ளடக்கிய ஆரவல்லி தொடரின் 90% இதனால் பாதிப்பிற்கு உள்ளாகும். இது ஏதோ வடநாட்டில் உள்ள பிரச்னை என நாம் எளிதில் கடந்து விட முடியாது. சுற்றுசூழல் ரீதியாக நாமும் இதனால் பாதிக்கப்படுவதோடு இதே வரையறையை இங்கும் அமல்படுத்தினால் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளும் கார்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு சென்று விடும். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையினை அழிக்க முனைவது எந்த வகையிலும் ஏற்று கொள்ள இயலாது. இந்தியாவின் ஒரு பகுதியாக மட்டும் இல்லாமல் நாட்டின் தனிசிறப்பாக அமைந்த ஆரவல்லி மலைகளை காப்பது நமது கடமை. எனவே அப்பகுதி முழுமையாக சுற்றுசூழல் மண்டலமாக அறிவித்து அதனை பாதுகாத்திட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply