சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம், நாச்சியார்பேட்டை, ஆண்டிமடம், தா.பழூர், செந்துறை, ஜெயங்கொண்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 47,000 ஹெக்டேர் பரப்பளவில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. தரிசு நிலத்தின் தங்கம் எனப்படும் முந்திரி விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள போதும் பல்வேறு சவால்களையும், பாதிப்புகளையும் இவர்கள் எதிர்கொள்வதால் இவ்விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
பருவமழை தவறுதல், நோய் தாக்குதல், வானிலை பாதிப்பு (வறட்சி, தொடர் மழை, பனிப்பொழிவு) பருவநிலை மாற்றம் காரணமாக பூக்கும் / காய்க்கும் காலத்தில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. உற்பத்தி குறைந்தாலும் குறைந்த பட்ச ஆதார விலை இல்லாமல் இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்கி செல்லுதல், நிவாரணம் கிடைப்பதில் தாமதம், மாவட்டத்தில் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லாததால் விவசாயிகள் முந்திரியினை கடலூருக்கு அனுப்புவதால் ஏற்படும் போக்குவரத்து செலவு, இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு என பல்வேறு பாதிப்பிற்கு உள்ளாவதால் குறிப்பிட்ட முந்திரி விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் 60% விவசாயிகள் முந்திரி விவசாயத்தை நம்பி உள்ள போதிலும் இவர்களது நலன் கருதி முந்திரி சார்ந்த தொழிற்சாலைகள், மதிப்பு கூட்டும் மையங்கள், பதப்படுத்தும் நிலையங்கள், மானிய விலையில் தொழிற்கருவிகள், விலை ஏற்ற இறக்கத்தினால் ஏற்படும் இழப்பை தடுக்க திட்டம், ஏற்றுமதி சந்தை வாய்ப்பு, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்பிற்கு உரிய நிவாரணம் என எவ்வித உதவிகளும் இல்லாததால் இவ்விவசாயிகள் மிகுந்த பொருளாதார அழுத்தத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் 2.09 லட்சம் ஏக்கர் பரப்பளவில் முந்திரி சாகுபடி செய்யப்படும் நிலையில் இதன்மூலம் 43,460 மெட்ரிக் டன் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் முந்திரி விவசாயம் அதிகம். எனவே இவர்களது நலனை கருத்தில் கொண்டு கடலூரை தலைமை இடமாகக் கொண்டு தமிழக அரசு முந்திரி ஆணையத்தினை 12.9.25 அன்று தொடங்கியது. இதன் செயல்பாடுகளுக்கு என ரூ 10 கோடியினை ஒதுக்கீடு செய்வதாக வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தது.ஆனால் குறிப்பிட்ட ஆணையம் இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை.
மத்திய அரசு பட்ஜெட்டில் முந்திரியை கடற்கரைப்பகுதி உயர்மதிப்பு பயிராக அறிவித்து 2030க்குள் உலக பிரிமீயம் பிராண்டாக மாற்றும் திட்டமிடலுடன் முனைப்பு காட்டி வருகிறது. இதன்படி நமது முந்திரி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதுடன், முந்திரி சார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிப்பதோடு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் இயலும். மேலும் இவ்விவசாயம் சார்ந்தவர்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்வதோடு, அரியலூரில் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்கவும், மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி மேற்கொள்ளவும், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதை தடுத்து சாகுபடி பரப்பை அதிகரித்து ஏற்றுமதி சந்தையில் நம் விவசாயிகள் சிறக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டால் முந்திரி பூக்களைப் போல் அதனை விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்வும் மலரும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply