சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி பல்வேறு கிராமங்களை உள்ளடக்கியது.இங்கு நெல், கொய்யா, வாழை உள்ளிட்ட விவசாயம் அதிகப்படியான மக்கள் செய்து வரும் நிலையில் நீர் தட்டுப்பாடு இங்கு தீர்க்கப்படாத பிரச்னையாக இருந்து வருகிறது. இப்பகுதியில் உத்திர காவேரி என்னும் ஆறு பாய்ந்து வரும் நிலையிலும் அவற்றின் குறுக்கே அணைகளோ, தடுப்பு அணைகளோ இதுவரை கட்டப்படவில்லை. இதனால் தொகுதியின் பெயரில் அணைக்கட்டு இருந்தபோதும் நீரை தேக்கும் அணைக்கட்டு இல்லாத நிலையே இங்கு உள்ளது.
குறிப்பிட்ட ஆற்றில் பாயும் நீர் வீணாக கடலுக்கு செல்லும் சூழலில் அதனால் விவசாயிகள் பயன்பெற இயலாத நிலையே உள்ளது. இதனால் மழைநீரை நம்பியே விவசாயம் செய்ய வேண்டிய அவலநிலையில் பல ஆயிரம் பாசன நிலங்கள் பாதிக்கப்படும் நிலை இங்கு காணப்படுகிறது.குருமலை, பீஞ்சமந்தை, பலாம்பட்டு உள்ளிட்ட ஏராளமான மலைகிராமங்கள், விவசாயத்தை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் நீர்தேக்கம் இன்றி அதிகமாக பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
உத்திர காவேரி ஆற்றில் அணைக்கட்டப்பட்டால் அதன்மூலம் முப்போக விவசாயம் இங்கு சாத்தியமாவதின் மூலம் விவசாயிகளின் பொருளாதாரமும், பயிர் உற்பத்தியும் மேம்படும். நிலத்தடி நீர் உயர்வதோடு குடிநீர் பற்றாக்குறை நிவர்த்தி ஆகும். இப்பகுதியின் சுற்றுச்சூழலும், சுற்றுலாவும், விவசாயமும் மேம்படும் என்பதால் குறிப்பிட்ட பகுதியில் அணை கட்டப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நூற்றாண்டு கால கனவாக உள்ளது.
கடந்த 2001-2006 காலகட்டத்தில் உத்திரகாவேரி ஆற்றின் குறுக்கே ரூ29 கோடி செலவில் அணை கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அரசியல் மாற்றம், நில ஒதுக்கீடு வழக்கு உள்ளிட்ட காரணங்களால் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 2018ல் முன்னாள் முதல்வர் எடப்பாடி.பழனிசாமி குறிப்பிட்ட ஆற்றில் 4 தடுப்பணைகள் அமைக்கப்படும் என அறிவித்தார். அதுவும் முடங்கிப்போன நிலையில் கடந்த 2021ல் ரூ40 கோடி செலவில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ரூ.176 கோடி செலவில் மேல அரசம்பட்டு கிராமம் அருகே அணை கட்டுவதற்கான அடிக்கல்லை பிப்ரவரி/2026ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டி உள்ளார்.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் அணைக்கட்டு தொகுதி விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவர். ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பலகாலகட்டங்களில் முடக்கப்பட்டது போல் அல்லாமல் விவசாயிகள் நலன் கருதி இத்திட்டம் நிறைேவேற்றிட வேண்டும். இதன்மூலம் இப்பகுதி விவசாயம், நீர் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவதால் இத்திட்டத்தினை முழுமையாக செயல்படுத்தி இப்பகுதி விவசாயிகளின் நீண்டகால கனவினை நிறைவேற்றிட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply