சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளிடம் இருந்து 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அபகரித்து தனியாருக்கு தாரைவார்ப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் தொழிற்திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு

ஈரோடு மாவட்டம் பெருந் துறையில் கடந்த 21.2.2021 ல் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்ற எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் சம்மதம் இல்லாமல் ஒரு சதுர அடி நிலம் கூட எடுக்க மாட்டோம் என்றார். 2021 திமுக தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதி எண்.43ல் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில் விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதை தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு விளைநிலங்கள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

2021ல் தேர்தலில் வெற்றிபெற்ற பின் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கும், உத்தரவாதத்திற்கும் எதிராக தி.மு.க அரசால் விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி விவசாய விளைநிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டன. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதியில் 5 சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 60 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டது. இப்பகுதி தமிழகத்தின் உணவுகளஞ்சியமாக உள்ள நிலையில் விவசாய நிலங்கள் இழப்பால் உணவு பாதுகாப்பு பெரிதும் பாதிக்கப்படும்.

ஓசூர் விமான நிலையம், இன்னோவேஷன் காரிடார், சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கம், SEZ திட்டங்களுக்காக சுமார் 39 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப் பட்டு உள்ளது. சென்னை அருகே பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலைய திட்டத்திற்கு என தேர்வு செய்யப்பட்ட 5746 ஏக்கரில் 3774 ஏக்கர் நிலம் விவசாய விளைநிலங்களே. தமிழகத்தில் 40 சிப்காட் அமைக்க பல்வேறு பகுதிகளிலும் 60 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்ககளை அரசு கையகப்படுத்தி வருகிறது.

அதானி, டாடா போன்ற நிறுவனங்களின் சோலார் மின்திட்டங்களுக்கு என ராமனாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் மேய்ச்சல் நிலங்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன. இதற்கென கட்டாயமாக நிலம் எடுக்கப்படுவதால் போதிய இழப்பீடு கிடைக்காததுடன், கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் ஒப்புதல் இல்லாமலே நிலம் எடுக்கப்படுவதும் எதிர்ப்பவர்கள் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்யப்படுவதும் நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் மேல்மாவில் கட்டாயநில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அறவழியில் போராடிய விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

விவசாயிகள் ஒப்புதல் இல்லாமலே அவர்களது நிலத்தினை அபகரிக்கும் வகையில் கடந்த 2023ல் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் (Tamil Nadu Land Consolidation (for Special projects) Act) தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. இத்தகைய தீவிர நில அபகரிப்பினால் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேலாக விவசாய நிலங்கள் கையகபடுத்தி அரசு தனியாருக்கு தாரை வார்த்து உள்ளது. பயனற்ற நிலங்களை அ அரசுத்திட்டங்களுக்காக எடுப்பதை விட்டு விவசாயிகளிடம் இருந்து நிலம் பறிக்கப்படுவதால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆனதோடு விவசாயம் தடைபடுவதால் உணவு பாதுகாப்பு, வேலைவாய்ப்புகள் பாதிப்பிற்கு உள்ளாகிறது. சென்னை – சேலம் எட்டுவழிச்சாலைக்கு என விவசாயநிலம் கையகப்படுத்தலின் போது விவசாயிகளுடன் போராடியவர் முதல்வர் ஆனதும் அத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இங்கு ஆட்சிகள் தான் மாறுகிறதே தவிர காட்சிகள் மாறவே இல்லை…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *