சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழை இதுவரை வழக்காடு மொழியாக அறிவிக்கப்படவில்லை. அரசியல் அமைப்பு சட்டம் 348 (1) உச்சநீதிமன்றம் மற்றும் அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் வழக்காடு மொழியாக ஆங்கிலம் பயன்படுத்த வேண்டும் என்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 4 உயர்நீதிமன்றங்களில் இந்தி வழக்காடு மொழியாக அனுமதிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக 1950 ல் ராஜஸ்தான், 1969ல் உத்தரபிரதேசம் (அலகாபாத்), 1971ல் மத்திய பிரதேசம், 1972ல் பீகார் உயர்நீதிமன்றங்களுக்கு வழக்காடு மொழியாக இந்தியினை பயன்படுத்திட அதிகாரபூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் ஏனைய தமிழ் உள்ளிட்ட மொழிகள் வழக்காடு மொழியாக அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உச்சநீதிமன்ற முழு நீதிபதிகள் கூட்டம் 2012 மற்றும் 2016 ல் முழுமையாக நிராகரித்தது.
தமிழக சட்டமன்றத்தில் கடந்த 6.12.2016 அன்று இக்கோரிக்கையினை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபோல் கடந்த 16.6.2025 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் தமிழை வழக்காடு மொழியாக்கிட வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் இதுவரை இதற்கான எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. சில நீதிபதிகள் தமிழில் வாதிட அனுமதித்தாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியாகவில்லை.
தமிழை உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக அமல்படுத்த சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆங்கில சட்ட வார்த்தைக்கு துல்லியமான தமிழ் சொற்கள் இல்லை. மொழிபெயர்ப்பாளர்கள், தமிழ் தட்டச்சு பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட உள்கட்டமைப்பில் சில சவால்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் உச்ச நீதிமன்ற உயர் மன்ற தீர்ப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன. 2024 வரை உச்சநீதிமன்ற 2559 தீர்ப்புகளும் சென்னை உயர்நீதிமன்ற 892 தீர்ப்புகளும் தமிழில் வெளியாகி உள்ளன.
தற்போது உள்ள தகவல் தொழில்நுட்பம் மூலம் எளிதில் மொழிபெயர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இதனை காரணம் காட்டி தமிழை வழக்காடு மொழியாக்க மறுப்பது பாரபட்சமான மனநிலையினை காட்டுவதாகவே உள்ளது. உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக நடைமுறைபடுத்தப்பட நாடாளுமன்றம் அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன் குடியரசு தலைவர் அனுமதிக்க வேண்டும். எல்லா தகுதிகளும் இருந்தும் உயர்தனிசெம்மொழியான தமிழ் நீதிமன்றங்களில் புறக்கணிக்கப்படுவது தமிழ் மொழிக்கு நேர்ந்த அநீதி மட்டும்அல்ல. ஜனநாயகத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையாகவே தெரிகிறது.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply