சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

மீஞ்சூர் அருகே கஞ்சா கும்பல் பட்டாக்கத்தியால் தாக்கியதில் மாணவி படுகாயம் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

மீஞ்சூர் பகுதியில் கஞ்சா கும்பல் தாக்கியதில் காயமடைந்த மாணவி சம்பவம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வல்லூர் பகுதியில் கல்லூரி மாணவி வீட்டில் தனியாக செமஸ்டர் தேர்வுக்கு படித்து கொண்டு இருந்து உள்ளார். அப்போது கஞ்சாப் போதையில் இருந்த 3 இளைஞர்கள் வீட்டிற்குள் புகுந்து மாணவியிடம் பாலியல் அத்துமீறல் மேற்கொள்ள முயன்றது. மாணவி அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது பட்டாக்கத்தி கொண்டு சரமாரியாக அக் கும்பல் தாக்கி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் போதைப்பொருட்களின் புழக்கத்தால் சட்டம், ஒழுங்கு சீர்குலைவும், சமூக அமைதியும் சீரழிந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மீஞ்சூரில் வீட்டில் இருந்த பெண் மீது இத்தகைய அத்துமீறல் நடந்து உள்ளது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த 5 ஆண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதை நாள்தோறும் நடைபெறும் சம்பவங்கள் மூலம் அறிகிறோம். இதற்கு முக்கிய காரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் பட்டி, தொட்டி எங்கும் பரவியதே காரணம் எனலாம். இருந்தபோதிலும் தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு பூஜ்ஜியமாக குறைந்து உள்ளது என தெரிவித்து அமைச்சர். சுப்பிரமணியம் மூடிமறைக்க முயன்றார்.

திருத்தணியில் 17 வயது சிறுவர்கள் கஞ்சா போதையில் ஒரு வடமாநில இளைஞரை வெட்டியது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள், கஞ்சா பறிமுதல் மற்றும் வழக்குகள் மூலம் அமைச்சரது வாக்குமூலம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றது அம்பலமாகிப் போனது. அரசே மதுவிற்பனையினை மேற்கொள்ளும் நிலையில் கசாப்புக் கடைக்காரனிடம் கருணையினை எதிர்பார்ப்பதும், தமிழக அரசிடம் அறத்தை எதிர்பார்ப்பதும் ஒன்றாகிப்போனது.

தமிழகத்தில் கஞ்சா புழக்கம் உச்சத்தில் உள்ளதால் இதன்மூலம் பள்ளி மாணவர்கள் வரை பாதிக்கப்படும் சூழலால் அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகும் அவலநிலையே உள்ளது. இதனால் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் குற்றங்கள் ஏற்படுவதும், பெண்கள், முதியோர், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதும் சமூக அமைதிக்கு சமாதி கட்டுவதாக உள்ளது. எனவே போதைப்பொருள் புழக்கத்தினை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பெண்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் நிலையினை உருவாக்கிட வேண்டும்.

மாணவி தாக்குதல் மீஞ்சூர்
கஞ்சா பிரச்சனை தமிழ்நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *