சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கோமா நிலையில் உள்ள கனிமவளக் கடத்தல் தடுப்பு கண்காணிப்புக்குழு கண்திறப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

தமிழ்நாட்டில் சட்டவிரோத கனிமவளக் கடத்தல் மற்றும் கல்குவாரி செயல்பாடுகள்

சென்னை உயர்நீதிமன்ற 5.11.2009 அன்றைய உத்தரவின்படி 13.11.2009 அன்று தமிழ்நாடு அரசு மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான கனிமவளக் கடத்தல் தடுப்பு சிறப்பு கண்காணிப்புக்குழுவினை (Task Force) அமைத்தது. (G.O.Ms No.135 (Industries Department). சட்டவிரோத குவாரி/சுரங்கம் கண்காணிப்பு, கனிம வளக் கடத்தல் தடுப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு தவிர்ப்பு உள்ளிட்ட நோக்கங்களுக்காக இக்குழு தொடங்கப்பட்டது. மாவட்ட அளவில் ஆட்சித் தலைவரை தலைவராக கொண்டு கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்துறை, வனத்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட 13 துறை அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெறுவர். இதுபோலவே தாலுகா அளவிலான குழு தாசில்தார் தலைமையில் செயல்படுகிறது.

இக்குழு மாதம் ஒருமுறை கூட்டம் நடத்தி தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக கனிமவளம் அபகரிக்கப்படுவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். இதுபோல் கனிமவளிக்கடத்தலை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆனால் இக்குழு முறையாக கூடவோ, உரிய தடுப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதோ இல்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டதின் பேரில் நீதிமன்றம் அறிவுறுத்தியபோதும் அதனை அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை. இவற்றை கண்காணிக்க வேண்டிய மாநில அளவிலான குழு (Appellate Forum)கூட சரிவர செயல்படாத சூழலில் இவர்கள் எப்படி மாவட்டத்தினை கண்காணிப்பு செய்வார்கள்?.

கல்குவாரி உரிமையாளர்களுடன் வருவாய், சுரங்கம், காவல் துறை அதிகாரிகளுடன் சமரசம் செய்துகொண்ட நிலையில் சட்டவிரோத கடத்தல்களை கண்காணிப்புக்குழு தடுக்க தவறும் நிலையே ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக பல குவாரிகளும் அரசியல்வாதிகளால் நடத்தப்படும் நிலையில் அதிகாரிகள் அதன் சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாகவே இருந்து உள்ளனர். மேலும் உரிய ஊழியர்கள் இல்லாதது, கண்டறிய பட்டாலும் துரித நடவடிக்கை எடுக்க முடியாத வகையில் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இக்கண்காணிப்பு குழு சுதந்திரமாய் செயல்பட முடியாததால் இக்குழு பெயர் அளவில் மட்டுமே உள்ளதோடு பெயர்சொல்லும் படியாக இல்லை.

தமிழ்நாட்டில் கனிமவள மேலாண்மை தொடர்பான இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் ( CAG) பல அறிக்கைகளை வெளியிட்டு உள்ளார். அதில் கனிமவளம் தடுப்பு தொடர்பான சிறப்புக்குழு அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் சரிவர செயல்படுவதில்லை என குற்றம் சுமத்தி உள்ளது. இதனால் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கனிமவளம் எடுக்கப்படுவதும், சட்டவிரோதமாக கடத்தல் சம்பவங்கள் நடப்பதும் தொடர்வதாகவும் தெரிவித்து உள்ளது. மாநில அளவிலான ஒருங்கிணைப்புக்குழு 2015-17 காலத்தில் வெறும் 4 கூட்டங்கள் மட்டுமே நடத்தி உள்ளதாகவும் கூறி உள்ளது. இதனால் சுற்றுசூழல் பாதிப்பு, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் புகார் தெரிவிக்கிறது.

இத்தகையப் போக்கினால் கடந்த காலங்களில் கட்டுப்பாடின்றி கனிமவளச்சுரண்டல்கள் அரங்கேறின. இது பற்றி கேள்வி கேட்கும் சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்டனர். தமிழ்நாட்டின் அநேகப் பகுதிகள் பள்ளத்தாக்குகளாக உருமாற்றம் கொண்டது. இதனால் நிலத்தடி நீர், விவசாயம், இயற்கை வளம், சுகாதாரம் , காலநிலை, புவியியல் தன்மை பாதிக்கப்பட்டது. இருப்பினும் இதைப்பற்றி கவலை கொள்ளாத மலை விழுங்கி மாஃபியாக்கள் தமிழ்நாட்டு கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் குறிக்கோளோடு செயல்பட்டனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் சமீபத்தில் கண்டறியப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் பகுதி 2000 அடி ஆழ கல்குவாரி சாட்சியாக உள்ளது.

தமிழக அரசு தற்போது இவ்விஷயத்தில் துரித நடவடிக்கை மேற்கொள்வது பாராட்டத்தக்கது. கனிமவளத்துறை அமைச்சர் பிரபு மேற்கொண்ட ஆய்வினைத் தொடர்ந்து 155 சட்டவிரோத குவாரிகள் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் அனுமதி இன்றி கனிமவளக் கடத்தலில் ஈடுபட்ட 469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுமையாக இப்பணி செயல்படுத்தப்பட வேண்டும். மேலும்

இதுபோல சட்டவிரோத செயல்கள் தொடராத வகையில் தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்புக்குழு காகிதத்தில் மட்டுமே உள்ள நிலையில் அதனை நடைமுறையில் செயல்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கைகள் தமிழக அரசு எடுத்தாக வேண்டும்.

சட்டவிரோத கனிமவளக் கடத்தலை தடுக்க உருவான குழு ஏன் செயலற்றது?
கனிமவளச் சுரண்டலை தடுக்க கண்காணிப்புக்குழு தோல்வியா?
தமிழ்நாட்டில் சட்டவிரோத குவாரிகள்: கண்காணிப்பு எங்கே?
கனிமவளக் கடத்தல் தடுப்பு குழு காகிதத்தில் மட்டுமா?
சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமான கனிமவளச் சுரண்டல்
சட்டவிரோத கல்குவாரிகளை யார் கண்காணிக்கிறார்கள்?
கனிமவள கொள்ளையை தடுக்க அவசர நடவடிக்கை தேவை
குவாரி மாஃபியாக்களை கட்டுப்படுத்த கண்காணிப்புக்குழு செயல்படுமா?
தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை காப்பது யார்?
கனிமவள மேலாண்மையில் கண்காணிப்பு குறைபாடுகள் அம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *