சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

சூழலியல் போராளி. Dr.சத்தியசுந்தரி பெயரில் சுற்றுச்சூழல் விருது – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

பவானி ஆற்றை பாதுகாக்க போராடிய டாக்டர் சத்தியசுந்தரியின் நினைவாக சுற்றுச்சூழல் விருது வழங்க கோரிக்கை

சூழலியல் போராளி.சத்திய சுந்தரி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப் பாளையம் பகுதியைச் சேர்ந்த புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர் ஆவார்.இவர் அப்பகுதியில் உள்ள பெண்கள் அதிகமாக குடல், சுவாசம் உள்ளிட்ட உடல்நலக்கோளாறு அடைவதை ஒட்டி பவானி ஆற்று நீருடன் தொடர்புபடுத்தி களஆய்வு செய்தார். 1980 களின் இறுதியில் சவுத் இந்தியன் விஸ்கோஸ் ஆலை தினசரி பல ஆயிரம் லிட்டர் நீரை எடுத்து அதிக அளவு கரிமப்பொருட்கள், சல்பர் சேர்மங்கள், ஃபீனால், லிக்னின், உலோகங்கள், நானைல்பெனால் போன்ற நச்சுக்களுடன் கழிவுநீரை ஆற்றில் விட்டது.

இதனால் பவானிசாகர் அணைவரை மாசு பரவி குடிநீர், விவசாயம், மீன்வளம் கடும் பாதிப்பிற்கு உள்ளானதை கண்டு அறிந்தார். இதனால் நிலத்தடி நீர் மாசுபாடு ஏற்பட்டதால் அப்பகுதி மக்களுக்கு உடல்நல பாதிப்புகள் உருவானதை அறிந்தார். இதை அடுத்து பவானி ஆறு பாதுகாப்பு கூட்டமைப்பு மூலம் மக்களை திரட்டி போராடினார். குறிப்பிட்ட ஆலைக்கு எதிராக உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் தொடர்ந்தார். இதன் மூலம் 1994ல் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆலைக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொண்டது. இவரது போராட்டம் தமிழகத்தில் தொழிற்சாலை மாசு எதிர்ப்பு போராட்டங்களுக்கு முன் உதாரணமாக அமைந்தது.

ஆறு என்பது வெறும் நீர் மட்டுமல்ல சமூகத்தின் உயிர்நாடி என்பதை மக்களிடம் வலியுறுத்தி அதனை காக்க இறுதிமூச்சு வரை போராடியவர் கடந்த 26.6.2026 அன்று 92 வயதில் இயற்கை எய்தினார். பவானி, அமராவதி, காவிரி போன்ற நதிகள் மாசுபட்டுள்ள நிலையில்

அதனை மீட்டுருவாக்கம் செய்யவேண்டிய சூழலில் அவரது வாழ்க்கை முக்கியத்துவம் பெறுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவரது பங்களிப்பு பலராலும் போற்றப்படும் நிலையிலும் அவரது இறப்பிற்கு அரசு சார்பில் மரியாதை வழங்கப்படவில்லை.

சமூகத்திற்கு தங்களது பங்களிப்புகளால் தொண்டாற்றியவர்களை நினைவு கூறுவதும், அவரது பெருமைகளை போற்றுவதும் வரும் தலைமுறையினரை நல்ல வழித்தடத்தில் கொண்டு செல்லும். மேலும் இதுபோன்ற பணிகளை செய்ய தூண்டுகோலாகவும் அமையும். எனவே சூழலியல் போராளி Dr.சத்திய சுந்தரி அவர்களை நினைவு கூறும் வகையில் தமிழக அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும். அவருக்கு கோபிசெட்டிப்பாளையம் அல்லது சிறுமுகை பகுதியில் பவானி ஆறு கரையில் நினைவு மண்டபம் எழுப்பப்படவேண்டும்.

அவரது வாழ்க்கை வரலாறு, போராட்டங்கள் குறித்த ஆவணங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு என போராடி வரும் போராளிகளுக்கு வருடந்தோறும் அரசு சார்பில் Dr.சத்திய சுந்தரி பெயரில் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்பட வேண்டும். பாடப்புத்தகங்களில் அவரது பணிகள் இடம்பெற வேண்டும். இதன்மூலம் தமிழகத்தின் ஆறுகளைப் பாதுகாக்கும் பணிகளுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைவதோடு பவானி ஆற்றை மீட்க மேற்கொண்ட அன்னாரது பணிக்கு பெருமை சேர்ப்பதாகவும் அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *