சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றிற்கு நடைபெறும் தேர்தல்களில் வாக்காளர்கள் தேர்வு செய்யும் பிரதிநிதி அவர்களின் 5 ஆண்டு கால பதவிகாலம் முடிவதற்குள் அவர்களது செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை அல்லது தவறு செய்தார் எனில் அவர்களை பதவியில் இருந்து நீக்கும் உரிமை வாக்காளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இந்திய அரசியல் அமைப்பு சட்டம். 1951 இதற்கு எந்த வகையிலும் இடம் அளிக்கவில்லை. ஒரு பிரதிநிதியினை தேர்வு செய்யும் உரிமை அளிக்கப்படும் போது அவர்களை திரும்பபெறும் உரிமையும் ( Right to Recall) RTR வழங்கப்படுவதே சரியானது. இதனால் வாக்காளர்கள் 5 வருடகாலம் சகித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. இதனால் மக்கள் தங்களது அடிப்படை பிரச்னைகளை பூர்த்தி செய்ய இயலாததோடு ஜனநாயகம் என்பது வணிகமயமாகும் நிலைக்கே தள்ளப்படுகிறது.
அரசியல் நிர்ணய சபையில் 29.11.1948ல் லோகநாத் மிஸ்ரா ஒரு திருத்தத்தை முன்மொழிந்தார். மக்களே உண்மையான எஜமானர்கள். பிரதிநிதிகள் சேவை செய்யாவிட்டால் நீக்கப்பட வேண்டும் என வாதிட்டார். இது அடிப்படை ஜனநாயக நாயக உரிமை என்றார். இதற்கு சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அரசியல் சட்டத்தில் இடம்பெறவில்லை. 1974 ல் ஜெயபிரகாஷ் நாராயணன் தனது சம்பூர்ண கிராந்தி இயக்கத்தில் திரும்பபெறும் உரிமையினை வலியுறுத்தினார்.
இதே கோரிக்கையினை கடந்த 1974ல் சி.கே சந்திரப்பன்(CPI) லோக்சபாவில் அரசியல்சட்ட சட்டதிருத்தம் செய்ய வலியுறுத்தினார்.இதனை அப்போதைய பா.ஜ.க தலைவர் வாஜ்பாய் உள்ளிட்டோர் ஆதரித்தனர். ஆனால் மசோதா நிறைவேற்றப்படவில்லை. 2016ல் பா.ஜ.க M.P வருண்காந்தி தனிப்பட்ட உறுப்பினர் மசோதா கொண்டு வந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 75% வாக்காளர்கள் அதிருப்தி தெரிவித்தால் திரும்ப பெற வேண்டும் என்றார். இதனை அண்ணா ஹசாரே உள்ளிட்டோர் ஆதரித்தனர். 2026 பிப்ரவரியில் ராகவ் சாதா (AAP) ராஜ்யசபாவில் zero hourல் இப்பிரச்னையினை வலியுறுத்தினார்.
வாக்காளர்களுக்கு தேர்வு செய்யும் உரிமை போல் நீக்கும் உரிமையும் வேண்டும் என்றார்.18 மாதங்கள் கடந்து 35 – 40% வாக்காளர்கள் மனு கொடுத்து பின் பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த முன்மொழிந்தார். ஆனால் இதுவரை சட்டமாக்கப்படவில்லை. இந்திரஜித் குப்தா குழு தேர்தல் சீர்திருத்த விவாதத்தில் இப்பிரச்னையினை விவாதித்தது.ஆனால் உள்ளாட்சி அளவில் 2000ல் மத்திய பிரதேசத்தில் முதலாவதாக சட்டம் கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து சத்தீஸ்கர்,பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தராகண்ட், இமாசலபிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்கள் சட்டதிருத்தம் செய்து உள்ளது.
திரும்ப பெறும் உரிமையினை சட்டமாக்குவதற்கு அரசின் ஸ்திரதன்மை பாதிக்கும் எனக் கூறி தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. திரும்பபெறும் உரிமை (RTR) என்பது ஜனநாயக பொறுப்புணர்வை ஒவ்வொரு பிரதிநிதிகளுக்கும் உணர்த்துவதாகும். இதனால் மக்கள் பணம் விரயம் ஆவது தடுக்கப்படுவதோடு, மக்கள் நலன் சார்ந்து செயல்படும் இப்பணிகளில் ஈடுபடுவோர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதால் அவர்களது கோரிக்கைகளுக்கு செவிகொடுப்பார் என நம்பலாம். தேர்தல் நாள் மட்டுமே வாக்காளர் மக்களாட்சியின் எஜமானராய் இல்லாமல் என்றும் இருக்கும் வகையில் செயல்பாடற்ற மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் வகையில் சட்டதிருத்தம் அல்லது புதிய சட்டத்தினை கொண்டுவர வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply