சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்த நிலையில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 292 பேர் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த நிலையில் 4 கோடியே 83 லட்சத்து 29 ஆயிரத்து 573 பேர் வாக்களித்து உள்ளனர். இது 84.29% ஆக உள்ள நிலையில் எஸ்.ஐ.ஆர் பணிக்கு பின் இது பெரிதான மாற்றம் என எடுத்துக்கொள்ள இயலாது. காரணம் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொண்ட பின்பும் ஒரு கோடி பேர் வாக்களிக்காமல் உள்ளனர். இந்த வாக்குகளும் முழுமையாக பதிவாகும் போதுதான் மக்களின் உண்மையான உணர்வுகளை புரிந்து கொள்ள இயலும். தமிழகத்தில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் பெரும்பத்து, பொட்டலூரணி, குளத்துள்வாய்பட்டி உள்ளிட்ட பல கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளனர்.
இத்தகைய மக்களும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில், வேட்பாளர்கள் மீது நம்பகதன்மை இல்லாத பட்சத்தில் அதற்கும் இடமளித்து தேர்தலில் எல்லோரது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது தான் நோட்டா (None of the Above. NOTA).தேர்தல் நடத்தை விதிகள் 1961ன் படி எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களும் வாக்களிக்க வழிவகை செய்யும் வகையில் 49 ஓ கொண்டு வரப்பட்டது. இதில் ரகசிய தன்மை இல்லாததால் 2013 ல் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி EVM ல் தனி பட்டன் ஒதுக்கப்பட்டு ரகசியம் காக்கப்படுகிறது. ஆனால் எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ அது இன்னும் நிறைவேறவே இல்லை.
நோட்டா வாக்குகள் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அந்த தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளரே வெற்றிபெறுகிறார். நோட்டாவுக்கு எந்தவித சட்டபூர்வ முக்கியத்துவம் அளிக்கப்படாததால் எண்ணிக்கையில் மட்டுமே நோட்டா வாக்குகள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் எவ்வித பலனும் இல்லாததால் மக்கள் தேர்தலையே புறக்கணிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். நோட்டா வெறும் குறியீட்டு உரிமையாக மட்டுமே இருந்தால் ஜனநாயகத்தின் தரம் உயராது. அரசியல் கட்சிகள் தகுதியானவர்களை நிறுத்துவதற்கு அழுத்தம் ஏற்படாது.
நோட்டாவிற்கு 50% அல்லது அதற்கு மேல் வாக்குகள் பதிவானால் அந்த தொகுதியின் தேர்தலை ரத்து செய்து புதிய வேட்பாளர்களுடன் மறுதேர்தல் நடத்த வேண்டும். முந்தைய வேட்பாளர்கள் அந்த மறுதேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இது கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படுகிறது. நோட்டாவுக்கு தோற்ற கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் மறு தேர்தல் செலவை ஏற்க வேண்டும். நோட்டா வாக்குகளை தற்போது மதிப்பற்ற வாக்குகளாக கருதும் நிலையில் தேர்தல் முடிவில் அதனையும் சேர்த்து கணக்கிட வேண்டும்.மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல்களில் நோட்டாவிற்கு மதிப்பளித்து மறுதேர்தல் நடத்தும் நிலையில் தேர்தல் சீர்திருத்தம் மூலம் சட்டமன்ற/நாடாளுமன்ற தேர்தல்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
சட்ட ஆணையம் 2015ல் வெளியிட்ட 255வது அறிக்கையின் படி நோட்டாவுக்கு சட்டபூர்வ அந்தஸ்து அளித்து வாக்காளர்களின் அதிருப்தியை உண்மையான அரசியல் மாற்றமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தியது. இருந்த போதிலும் இதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் படிப்படியாக நோட்டாவால் எந்த பயனும் இல்லை என்பதால் அது புறக்கணிப்பிற்கு உள்ளானது. தேர்தல் சீர்திருத்தம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை. எனவே Right to Reject என்னும் உரிமையும் வாக்காளர்களுக்கு உண்டு என்பதை கருத்தில் கொண்டு நோட்டாவிற்கு அங்கீகாரமும், அதிகாரமும் அளித்திடும் வகையில் உரிய சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply