சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தமிழர்களின் உரிமையான கண்ணகி கோவிலை மீட்டு எடுத்து புனரமைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சிதிலமடைந்த கண்ணகி கோவில் மற்றும் புனரமைப்பு தேவைப்படும் வரலாற்று சின்னம்

தமிழ் இலக்கியத்தில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் மையப்பாத்திரமும், தலைவியும் ஆனவர் கண்ணகி. இவர் நீதிகேட்டு மதுரையை எரித்த பின் 14 நாட்கள் நடந்து சென்று திருச்செங்குன்றம் என்ற பகுதியில் இருந்து கோவலனுடன் விண்ணேறினாள் எனவும் அதனால் அந்த இடம் விண்ணேற்றிப் பாறை என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சேரமன்னன் செங்குட்டுவன் கி.பி.2ம் நூற்றாண்டில் கண்ணகியின் வரலாறை அறிந்து இமயமலையில் இருந்து கல் கொண்டு வந்து இப்பகுதியில் கண்ணகிக்கு சிலை வடித்து கோயில் கட்டி உள்ளார். இதுவே கண்ணகி கோட்டம் எனவும் மங்கள தேவி கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் பிரதிஷ்டை விழாவுக்கு இலங்கை மன்னன் கயவாகு (கஜபாகு) வந்ததாக மகாவம்சம் கூறுகிறது.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயில் பராமரிப்பு இன்றி சிதலமடைந்து புதர்செடிகளால் மூடப்பட்டது. 1963ல் ஆய்வாளர்கள் இதனை கண்டறிந்து வெளிப்படுத்திய பின் 1971 ல் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் இக்கோயில் உள்ளது. இவற்றின் சுவர்கள், படிகள், தளங்கள் அனைத்திலும் கனமான கற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மங்களாதேவி சன்னதியில் உடைந்த சிலை இடுப்புக்கு கீழ்பகுதி மட்டுமே கொண்ட சிலை உள்ளது. இடதுகால் மடித்து. வலதுகால் தரையில் சிலம்பு அணிந்த நிலையில் உள்ளது. கிழக்கு நோக்கி அமைந்த சிவன் கோவிலும், துர்க்கை மற்றும் கணபதி சன்னதிகளும் உள்ளன.

ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் சித்ரா பெளர்ணமி அன்று இக்கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கேரள, தமிழக மாநில அதிகாரிகள், காவல்துறை, வனத்துறை முன்னிலையில் கடும் பாதுகாப்புடன் இங்கு விழா நடக்கிறது. கண்ணகி சிலை சேதமடைந்தும், புனரமைக்கப்படாததால் சந்தனப் பசை கொண்டு மேல்பகுதியை உருவாக்கி வெள்ளி முகவாய் பொருத்தி அலங்கரித்து வழிபட்டு வருகின்றனர். தமிழக-கேரள எல்லையில் தேனி மாவட்டம் கூடலூர் அருகே இக்கோயில் அமைந்து உள்ள போதிலும் இங்கு வர சரியான பாதைகள் இல்லாததால் குமுளி வழியாகவே பக்தர்கள் வரவேண்டிய நிலை உள்ளது. கேரள தொல்லியல் துறை இதனை protected Monument ஆக 1983 ல்அறிவித்து இதனை தனது கட்டுப்பாட்டில் வைத்து உள்ளது.

வரலாற்று ஆவணங்கள் (1817 East india Company Survey, 1883 st.George Gazette, 1976 joint Survey) இக்கோயில் தமிழக எல்கைக்குள் இருப்பதாக தெளிவு படுத்தி உள்ளது. ஆனால் கேரளா தனது அதிகார வரம்பிற்குள் உள்ளதாக கூறி வருகிறது. தமிழக அரசு இக்கோயிலை அறநிலையத்துறை அல்லது தமிழக தொல்லியல் துறைக்கு மாற்ற வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதுவரை தமிழக அரசின் கைகளுக்குள் வரவில்லை. மேலும் கேரள அரசு இங்குள்ள சிலைகள், கட்டிடங்கள், சுவர்களை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மேலும் சிதலமடைந்து சேதம் அடையும் நிலையே உள்ளது.

இக்கோவிலின் விமானம் உள்ளிட்ட பகுதிகள் புனரமைக்கப்படாத நிலையில் சிதைந்து கல் குவியலாக காட்சி அளிக்கிறது. கடந்த 1970களில் சேதமடைந்த கண்ணகி சிலையின் மேல்பகுதி புனரமைப்பு பணிக்கு என தமிழக அரசிடம் கொடுக்கப்பட்ட போதும் இதுவரை அதனை புனரமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இக்கோயிலுக்கு புளியங்குடி வழியாக சாலை அமைத்தால் எளிதில் இப்பகுதிக்கு பக்தர்கள் செல்ல இயலும். பழம்பெருமையும், வரலாற்று சின்னமாகவும் காட்சி அளிக்கும் கண்ணகி கோயில் தமிழர்களின் பண்பாட்டை பிரதிபலிப்பதாகும். இதனை மீட்டு புனரமைக்க வேண்டியது தமிழர்களின் உரிமை மற்றும் கடமையாகும்.அன்று நீதி கேட்டு கண்ணகி போராடினாள். இன்று அவளது கோயிலை மீட்க நாம் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

சிதிலமடைந்த கண்ணகி கோவில்
தமிழர் வரலாறு மற்றும் பாரம்பரியம்
பழமையான கோவில்கள் பாதுகாப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *