சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
இந்தியாவிலேயே அதிக மினரல் வாட்டர் ஆலைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இங்கு ஏராளமான நிறுவனங்கள் சட்டவிரோதமாகவும் செயல்படும் நிலையில் இவற்றால் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் சுரண்டப்படுகிறது. மேலும் பல்வேறு கார்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வரம்பின்றி நீரை எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் அகல பாதாளத்திற்கு செல்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு விவசாயம் அடியோடு பாதிக்கப்படுகிறது. மேலும் உப்பு நீர் ஊடுருவதோடு எதிர்காலத்தில் பல நகரங்கள் நீர் இல்லாத நிலை (Day zero) நோக்கி செல்லும் அபாயம் உள்ளது.
நிலத்தடி நீர் அதிக பாதிப்பிற்கு உள்ளான மாவட்டங்களாக சேலம், திருப்பத்தூர், வேலூர், சென்னை, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாமக்கல், கரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களும் பாதிப்பிற்கு உள்ளான மாவட்டங்களாக கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களும் பாதிப்பை நோக்கி செல்லும் மாவட்டங்களாக தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டங்களும் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அதிகமான அளவில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல், விவசாய தேவைக்கென எடுக்கப்படும் நீர் வணிகரீதியில் பயன்பாடு, ஆலைகள் மூலம் தேவைக்கு அதிகமாக நீர் நுகர்வு நீர் தட்டுப்பாட்டை நோக்கி நம்மை நகர்த்தி செல்கிறது.
திருநெல்வேலி அருகே உள்ள கோகா கோலா நிறுவனம் தினசரி சுமார் 9 லட்சம் லிட்டர் வரை தாமிரபரணி நீர் எடுக்க அனுமதிக்கபட்டு உள்ள நிலையில் இதற்கு ஆயிரம் லிட்டருக்கு 47 பைசா வசூலிக்கப்படுகிறது. இதுபோல் இங்கு செயல்படும் பெப்சி நிறுவனம் தினமும் 15 லட்சம் லிட்டர் வரை நீர் எடுக்கும் நிலையில் ஆயிரம் லிட்டருக்கு 37 1/2 பைசா வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் ஆத்தூர் காமராஜர் அணையின் அருகாமையில் செயல்படும் பிஸ்லெரி என்னும் நிறுவனம் மூலம் தினமும் 5 லட்சம் லிட்டர் நீர் எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய முடியாததோடு விவசாயம், நிலத்தடி நீர்மட்டம் அடியோடு பாதிக்கப்படும் நிலையே உள்ளது.
தமிழ்நாட்டில் பாரம்பரியமாக நீர் நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. குறிப்பாக கி.மு.300 முதல் சோழர் பாண்டிய அரசு காலங்களில் மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. மழைநீர் சேகரிப்பு/ பாசனம்/வெள்ள கட்டுப்பாடு/நிலத்தடி நீர் செறிவூட்டல் உள்ளடக்கியதாக திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் இன்றோ நமது பொறுப்பின்மையால் ஜீவ ஆறுகள் எல்லாம் செத்த ஆறுகள் ஆகின. நீர்நிலைகள் கழிவு தேக்கங்களாக மாறிப் போகின. பன்னாட்டு நிறுவனங்கள் நம்மிடம் இருந்தே நீர் வளத்தை சுரண்டி நம்மிடமே அதனை விற்று கொள்ளை லாபம் கொள்கின்றன. இயற்கையின் கொடையான மலையை, மணலை, சுற்றுச்சூழலை பாதுகாக்க தவறியதின் விளைவாக பல்வேறு பாதிப்புகளை சந்திக்க தொடங்கி உள்ளோம்.
நிலத்தடி நீர் சரிவு பாதிப்பை தடுத்திட போர்கால அடிப்படையில் சில நடவடிக்கைகள் எடுத்தே தீரவேண்டும். 2026ல் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நீர்வளங்கள் (கட்டுப்பாடு, மேலாண்மை மற்றும் பெருக்கம்) மசோதா அடிப்படையில் TNWRMA அமைப்பை உடனடியாக செயல்படுத்திட வேண்டும். இதன்மூலம் அனைத்து நீர் ஆதாரங்களையும் கண்காணிக்க வேண்டும். தனியார் குடிநீர் ஆலைகள், தொழிற்சாலைகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். நிலத்தடி நீர் பாதிப்பிற்கு உள்ளான பகுதிகளில் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க தடை விதிக்க வேண்டும். தொழிற்சாலைகள் தங்கள் கழிவுநீரை சுத்திகரித்து மறுபயன்பாடு செய்வதை கட்டாயபடுத்த வேண்டும். மழைநீர் நிலத்தடி நீராக செறிவூட்ட கிராமங்கள் தோறும் நடவடிக்கை வேண்டும். பாழான நீர்நிலைகளை மீட்டெடுத்து காப்போம்.சட்டவிரோத நடவடிக்கை கண்காணிக்கவும், கிராமங்களில் நீர் மேம்பாட்டை செயல்படுத்திடவும் நீர் மேலாண்மை குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். நமது வளமான பூமி பாலைவனமாக மாறும் நிலை தடுப்போம். அதற்கான முயற்சியினை நாம் ஒவ்வொருவரும் எடுப்போம்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply