சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகத்தின் மாம்பழ தலைநகராக திகழ்கிறது. பர்கூர், காவேரிபட்டிணம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாம்பழ சாகுபடியினை விவசாயிகள் செய்து வருகின்றனர். இது போல் தர்மபுரி, சேலம், திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், நாமக்கல், தேனி மாவட்டங்களிலும் விவசாயிகள் மா விவசாயம் செய்கின்றனர். இங்கு பெங்களூரா, அல்போன்சா, நீலம், பங்கைப் பள்ளி, மல்கோவா, செந்தூரி, கலா படி, இமாம் பசந்த், ருமானி, நடு சாலை, பாதிரி, யானைத்தலை உள்ளிட்ட பல்வேறு வகை மாம்பழ இனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மாம்பழ சாகுபடி 1.45 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் இதன்மூலம் 10 லட்சம் டன் வரையில் விவசாயிகள் மாம்பழ அறுவடை செய்து வருகின்றனர். ஆண்டுக்கு பல லட்சம் டன் மாம்பழங்கள் பல்ப் (கூழ்) ஆக மாற்றப்பட்டு சவுதி, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 700 கோடி அளவிலான வருவாய் ஈட்டப்படுகிறது. இந்தியா அளவில் மாம்பழ உற்பத்தியில் இப்பகுதிகள் தலைசிறந்து விளங்குகின்றன.
முக்கனியில் முதல் கனியான மாம்பழ உற்பத்தியில் இப்பகுதி பெருமை பெற்றதாக திகழ்ந்தாலும் அதில் ஈடுபடும் விவசாயிகள் நிலை திருப்திகரமானதாக இனிப்பானதாக இல்லை. அதனை வெளிப்படுத்திடும் விதமாய் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மா சாகுபடி தற்போது 35 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு சுருங்கிப்போனது. போச்சம்பள்ளி, தட்டக்கல், வீரமலை உள்ளிட்ட பல இடங்களில் மா மரங்களை அகற்றி மாற்று பயிர்களுக்கு விவசாயிகள் நிலத்தை தயார் செய்து வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் மா சாகுபடி செய்யும் பரப்பளவு பெருமளவில் குறையும் அபாயம் உள்ளது.
மாங்கூழ் தொழிற்சாலைகள் தங்களுக்குள் சின்டிகேட் அமைத்து குறைந்த விலையில் கிலோ ரூ 3 முதல் 5 வரையில் மாம்பழங்களை விவசாயிகளிடம் வாங்குகின்றனர். இதனால் குறைந்த பட்ச விலை கூட கிடைக்காததால் விவசாயிகள் பாதிப்பு அடையும் நிலை உள்ளது. உரம். பூச்சிமருந்து, தொழிலாளர் கூலி உள்ளிட்ட செலவினங்களை பார்க்கும் போது விவசாயிகளுக்கு நஷ்டமே மிஞ்சுகிறது. மேலும் வறட்சி, நிலத்தடி நீர் பாதிப்பு, கோடை வெயிலால் பூக்கள் கருகுதல், பருவம் தவறிய மழை/ஆலங்கட்டி மழையால் விளைச்சல் பாதிப்பு என பல்வேறு நெருக்கடிகளுக்கு விவசாயிகள் உள்ளாகின்றனர்.
ஈரான்-இஸ்ரேல் மோதல், ரஷ்யா – உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் மாங்கூழ் ஏற்றுமதி வெகுவாக குறைந்தது. இதனால் கடந்த 2-3 ஆண்டுகளின் கையிருப்பு உள்ளதாக கூறி தொழிற்சாலைகள் மாம்பழங்களை விவசாயிகளிடம் வாங்க மறுக்கின்றனர்.கூழ் மீதான 12% ஜிஎஸ்டி, பானங்கள் தவிர்ப்பதில் மாங்கூழ் அளவு குறைப்பு, சிப்காட் மற்றும் குவாரிகளின் நில அபகரிப்பு, தொழிற்சாலை மின்கட்டண உயர்வு என தொடர் பாதிப்புகளால் மாம்பழ விவசாயம் இனிப்பானதாக இல்லை. இதனை நிவர்த்தி செய்திடும் விதமாய் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம், அரசே கொள்முதல், உற்பத்திக்கு மானியம் அளிப்பதோடு வருவாய் இழப்பில் தவிக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு கரம் அளித்திட தமிழகஅரசு முன்வர வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply