சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

ஆலங்குளம் அருகே பனைத்தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

ஆலங்குளம் பகுதியில் பனைத்தொழிலாளி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம் புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் சேட் மகன் மணிகண்டன். பனை ஏறும் தொழிலாளி. நேற்று (7ம் தேதி) ஆலங்குளம் சப்.இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா மற்றும் இரு போலீசார் மணிகண்டன் வீட்டிற்கு சென்று அவர்கள் கள் இறக்கி விற்பதாக கூறி பனந்தோப்பு இருந்த பகுதிக்கு அழைத்து சென்றனர். பின் மரத்தில் ஏறி மரத்தில் இருந்து பானைகளை இறக்க சொல்லி உள்ளார். மேலும் SI இசக்கிராஜா மணிகண்டனை ஜாதி ரீதியாக பேசியதுடன் ஒரு கட்டையால் தாக்க முயன்ற போது தவறி விழுந்ததில் அவர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கோபத்துடன் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தொழிலாளி மணிகண்டன் மீது நான்கு முறை சுட்டு உள்ளதில் அவர் இருகால்களிலும் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார்.

ஒரு பனைத்தொழிலாளி மீது துப்பாக்கி சூடு நடத்தும் அளவிற்கு அவர் என்ன தேசத்துரோகியா? பனைமரத்தில் இருந்து குறிப்பிட்ட தொழிலாளி பதநீர் மட்டுமே இறக்கி வருவதாக கூறிய நிலையில் கள் என்பதற்கு என்ன பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது? அதற்கான அடிப்படை ஆதாரம் என்ன இருக்கிறது? குழந்தைகள் முன்னிலையில் தொழிலாளி மீது அதிகார துஷ்பிரயோகம் செய்திட இசக்கிமுத்துவுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? கனிம வள கொள்ளையர்களிடம்/ பாலியல் குற்றவாளிகளிடம்/ கொலை, திருட்டு குற்றங்களில் ஈடுபடுவோரிடம்/ கஞ்சா உள்ளிட்ட போதை விற்பனையாளர்களிடம் காட்டாத வீரத்தை எளிய ஒரு குடிமகனிடம் காட்டுவது தான் வீரமா?

தமிழ்நாட்டில் 2021 மே முதல் 2025 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் 32 காவல் மரணங்கள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில் போலீஸ் அதிகார துஷ்பிரயோகம் காவல் மரணங்கள், சித்ரவதை, அதிகபடியான படைப் பயன்பாடு (Excessive force) பொய் வழக்கு, மனிதாபிமானமற்ற நடத்தை போன்றவற்றிற்கு காரணம் ஆகிறது. இதனால் சாதாரண மக்கள், சிறிய குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களே அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். சாத்தான்குளம் காவல் மரணத்தில் 9 காவலர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தொடரும் ஆலங்குளம் சம்பவங்கள் இன்னும் இவர்கள் திருந்தவில்லை என்பதையே வெளிச்சப்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக ரவுடி நீராவி முருகன் களக்காடு அருகே மார்ச் 16ந்தேதி கைது செய்ய முயன்ற போது SI இசக்கிராஜா ரவுடியை என்கவுண்டர் செய்து உள்ளார். இது போல் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இவர் பணியாற்றிய 2018ல் ரவுடிகளை எச்சரித்து ஆடியோ வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இசக்கிராஜா மீது 5 மனித உரிமை மீறல் வழக்குகளும், பத்திகையாளர் வேல்முருகன் உள்ளிட்ட 5 பேர்மீது தாக்கிய குற்றச்சாட்டில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது.

அதிகார போதையில் பல்வேறு வழக்குகளின் பிடியில் உள்ள உதவி ஆய்வாளர் எப்படி எளிய மக்களுக்கு பாதுகாவலாய் இருப்பார்? ஆலங்குளம் சம்பவம் தொடர்பாக இசக்கி ராஜா உள்ளிட்ட 3 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. காவல்துறைக்கும், மனித உரிமைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இதுபோன்ற நபர்கள் இத்துறைக்கு தகுதியானவர் தானா? என்பதை மனரீதியாக குறிப்பிட்ட துறையினர் ஆய்வு செய்திட வேண்டும். இல்லை என்றால் இவ்வாறான ஓநாய்கள் அப்பாவி ஆடுகள் பலவற்றின் ரத்தத்தை குடித்து விடும் ஆபத்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *