சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மருதமலை பகுதியில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைப்பதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது. இப்பகுதி நீலகிரி உள்ளிட்ட வனபகுதிகளில் இருந்து யானைகள் பிற வனப்பகுதிக்கு செல்லும் முக்கிய வழித்தடமாகும். இச்சூழலில் இங்கு மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளால் வனவிலங்குகளின் வலசைப் பாதை தடுக்கப்படுவதோடு, அவற்றின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதால் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட பகுதியில் சிலை நிறுவ தடை விதித்து உள்ளது. இது ஆறுதல் அளித்தாலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் பல்வேறு திட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் வனவிலங்குகளின் அமைதியை சீர்குலைப்பதாகவும், அவற்றின் வாழ்விடத்தை அபகரிப்பதாகவும் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் 685 பேர் வனவிலங்குகளால் தமிழ்நாட்டில் உயிர் இழந்து உள்ளனர். 2025ல் மட்டும் 43 பேர் உயிரிப்புக்கு உள்ளாகினர். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களான கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல்/தேனி, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் தான் இத்தகைய இறப்புகள் நிகழ்ந்து உள்ளன. வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் காடுகளில் மேற்கொள்ளப்படும் சாலை மற்றும் இருப்பு பாதை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள், பணபயிர்களுக்காக காடுகள் அழிப்பு, கனிமவள சுரங்கங்கள், சுற்றுலா மற்றும் ஆற்றல் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையில் வனவிலங்குகளின் இயல்பான இயக்கத்தை தடுப்பதால் தங்கள் வாழ்விடங்களை விட்டு குடியிருப்பு பகுதிக்குள் அவை வருவதால் மனித-விலங்கு மோதல்கள் உருவாக காரணமாகின்றன.
வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் மனிதர்களால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளால் விலங்குகள் எந்தெந்த வகையில் பாதிக்கப்படும் என்பதை நாம் சிறிதும் உணர்வதும் இல்லை. அக்கறை கொள்வதும் இல்லை. யானைகள் அமைதியை விரும்புபவை. 20 டெசிபல் ஒலிஅளவில் அவை வாழும் இடத்தில் மனிதர்களால் எழுப்பபடும் கடும் இரைச்சல் அவைகளின் நிம்மதியை சீர்குலைப்பதுடன் பெரும் மன அழுத்தத்திற்கும் காரணமாகிறது. காடுகளில் உள்ள நெடுஞ்சாலை இவைகளின் வலசைப்பாதையை தடுப்பதாக உள்ளதோடு, வாகனங்களின் சத்தம் இவற்றின் இயல்பு வாழ்க்கைக்கு எதிராக உள்ளது. வனங்களில் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் போது அபகரிப்பது இவற்றின் வழிப்பாதை மட்டுமல்ல. இவற்றின் வாழ்க்கையையும் தான்.
உயிரியல் உணர்திறன் நிரம்பிய வனப்பகுதிகள் சுற்றுலா மற்றும் மலை ஏற்றப் பகுதிகளாக மாற்றுவது சுற்றுச்சூழலுக்கும், இயற்கை சமநிலைக்கும் எதிரானது. இங்கு மேற்கொள்ளப்படும் பாதை விரிவாக்கத்தால் வனப்பகுதி குறைவதோடு, அதனை சார்ந்து வாழும் உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது. மேலும் மண்சரிவு, நீர் மற்றும் காற்று மாசுக்கு காரணமாவதுடன் அரியவகை தாவரங்கள், விலங்கினங்கள் அழியும் அபாயம் உள்ளது. வனங்களில் சாதாரணமாக வீசப்படும் பாட்டில்கள் வனபாதுகாவலான திகழும் யானையின் உயிருக்கே எமனாய் திகழ்கிறது. இது போலவே நெகிழி உள்ளிட்ட குப்பைகள் வன இயற்கை சூழலை சீர்குலைக்கின்றன.
காடுகள், ஈர நீர்நிலைகள், கடல்சார் பகுதிகள் என தொடர்ந்து நாம் மேற்கொள்ளும் அத்துமீறல்களால் எண்ணற்ற உயிரினங்களின் வாழ்க்கை பறிபோகின்றன. இருந்தும் சுயநல அகோரபசிக்கு, அதிகார வேட்கைக்கு இயற்கையை இரையாக்கி கொண்டு இருக்கின்றோம். நாம் மட்டுமே நலத்துடன் இருப்பது அல்ல வளர்ச்சி. நம்மை சுற்றி இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் தீங்கின்றி நம்மோடு இருக்க வேண்டும். அதுவே ஜீவனுள்ள வளர்ச்சி. குளங்களை அழித்தோம் நீரை தேடுகின்றோம். மரங்களை அழித்தோம் சுவாச காற்றைத் தேடுகின்றோம். நிஜங்களை அழித்து நிழலைத் தேடுகின்றோம். கண்களை விற்று சித்திரம் வாங்குவதால் பயன் உண்டா? எப்போது உணரப் போகின்றோம்? நாம்…
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply