சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தமிழக அரசு சிங்கப் பெண் படைக்கு வீரமங்கை குயிலி பெயர் சூட்ட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

பெண்கள் பாதுகாப்பு படைக்கு வீரமங்கை குயிலி பெயர் சூட்ட கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் அரியாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பெரிய முத்தன்-ராக்கு தம்பதியினருக்கு பிறந்த குயிலி (1749-1780) இளம் வயதிலேயே வாள், வளரி, சிலம்பம் உள்ளிட்ட போர்கலைகளில் சிறப்பு பெற்று இருந்தார். 1772ல் வேலுநாச்சியார் கணவர் முத்துவடுகநாதர் பிரிட்டிஷ் படையினரால் கொல்லப்பட்ட பிறகு அவர் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து திண்டுக்கல், விருப்பாட்சி பகுதிகளில் படைகளைத் திரட்டினார்.உடையாள் என்ற யாதவ சமூகப் பெண் ராணியின் மறைவிடத்தை பிரிட்டிஷாரிடம் சொல்ல மறுத்து உயிர் தியாகம் செய்தார். இத்தியாகத்தை நினைவு கூறும் வகையில் வேலுநாச்சியார் தன் பெண்கள் படைக்கு உடையாள் படை எனப் பெயரிட்டார்.

இப்படை முழுக்க பெண்களால் ஆன போர் அணி. இப்படையினருக்கு வாள், வளரி, துப்பாக்கி, குதிரைப்படை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. ராணியின் நம்பிக்கைக்கு உரியவரான குயிலி இந்தப் படையின் தளபதியாக இருந்தார்.வேலுநாச்சியார் ஹைதர் அலி, மருது சகோதரர்கள் உதவியுடன் சிவகங்கையினை மீட்கத் திட்டமிட்டபோது உடையாள் படை முக்கிய பங்கு வகித்தது. பெண்கள் பக்தியாளர்கள் போல உடையணிந்து ஆயுதங்களை மறைத்து உள்ளே நுழைந்து உளவு பார்த்தனர். குயிலி தன் நெய்பூசிய உடலில் தீவைத்துக் கொண்டு ஆயுத கிடங்கில் பாய்ந்து வெடிக்க செய்தார். இதில் முழு கிடங்கும் அழிந்தது. இது போரின் திருப்புமுனையானது.பிரிட்டிஷ் படை ஆயுதங்கள் இன்றி தோல்வி அடைந்தது.வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்டார். இந்நிகழ்வு 7.10.1780 அன்று நடைபெற்றதாக சரித்திர சான்றுகள் கூறுகின்றன.

இது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிரான பெண்கள் தலைமையிலான முதல் எதிர்ப்பு இயக்கமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய வரலாற்றில் முதல் மனித தற்கொலை தாக்குதலாகவும் கருதப்படுகிறது. வீரமங்கை குயிலி தீப்பாஞ்சி அம்மன் என்றும் முத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வழிபடப்படுகிறார். வாய்மொழிப் பாடல்கள், நாட்டுப்புற கதைகள், ஜீவபாரதி எழுதிய வேலுநாச்சியார் நாவல் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார். தமிழக மக்கள் இவரை வீரம், தியாகம், மனவலிமைக்கு அடையாளமாக பார்க்கின்றனர். தமிழக அரசு சிவகங்கையில் 2014ல் நினைவு சின்னமும், 2024ல் சிலையும் அமைத்து குயிலி தியாகத்தை போற்றி உள்ளது. இவரது நினைவுநாள் (அக்டோபர் 7ந் தேதி)இப்பகுதியில் தியாக நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

தியாகம், தமிழ் வீரத்தின் உச்சம். பெண் வீரம், சமூக நீதி, தலைமைத்துவம் உள்ளிட்டவற்றால் போற்றப்பட வேண்டிய குயிலியின் தீரம் இன்னும் மறைக்கப்பட்ட வரலாறாகவே உள்ளது. எனவே இதனை நினைவு கூறும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி பாடபுத்தகங்களில் இவரது வரலாறு இடம்பெற வேண்டும். சிவகங்கையில் உள்ள இவரது நினைவு மண்டபத்தை மேம்படுத்தி அருங்காட்சியமாக மாற்றப்பட வேண்டும். அவரது நினைவு தினம் எல்லாப் பகுதிகளிலும் விழாவாக நடத்தப்படுவதுடன் அவர் தொடர்பான பேச்சு, பாடல் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பின் சின்னமாக அவரை எடுத்துக்கொண்டால் பெண்கள் மற்றும் பின்தங்கிய மக்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும்.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதிய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க விரைவாக செயல்படும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிரடி நடவடிக்கைக்கான சிறப்பு பெண் காவல் படைப்பிரிவிற்கு சிங்கப் பெண் படை என பெயர் சூட்டி உள்ளது. பெண் பாதுகாப்பை நோக்கமாக கொண்ட பெண் தலைைமைத்துவ திட்டத்திற்கு

வீரமங்கை குயிலி பெயர் சூட்டினால் மிகவும் பொருத்தமாக இருக்கும். இதன்மூலம் உடையாள்படை மூலம் உரிமைகளுக்காய் தனது உயிரையே ஆயுதமாய் போராடி உயிர்நீத்த வரலாற்று சாட்சியான குயிலியின் புகழை போற்றுவதாகவும் அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *