சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

கரூர் கனிமவளக் கொள்ளை – பத்திரிகையாளர் மீது எம்.எல்.ஏ கும்பல் கொலைவெறி தாக்குதல் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

கரூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கும் போது தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளர்கள்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் நடைபெறும் கனிமவளக் கொள்ளை தொடர்பாக செய்தி சேகரிக்க நியூஸ் தமிழ் திருச்சி நிருபர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் சென்று உள்ளனர். அப்போது ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பழனியாண்டி மற்றும் கும்பல் பத்திரிகையாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளதோடு அவர்களிடம் இருந்த கேமரா உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளனர். அதன்பின் அவர்களை கடத்தி சென்று தலைமறைவாக வைத்திருந்த நிலையில் போலீசாரால் அவர்கள் மீட்கப்பட்டு தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

கடந்த 2022ல் 200 டன் சட்டவிரோத வெடிமருந்து கடத்தி வந்து வெடிவைத்து 23.25 கோடி மதிப்பிலான கனிமங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்ததற்காக பசுமை தீர்ப்பாயம் குழு அமைத்து ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்பட்ட பெருமைக்கு உரியவர் தான் எம்.எல்.ஏ. பழனியாண்டி’ அவர்தான் இத்தாக்குதலை முன்நின்று நடத்தி உள்ளார். தமிழகத்தில் சட்டவிரோதமாய் நடைபெறும் கனிமவளக் கொள்ளைக்கு அதிகார அரசியல் தொடர்பு பின்னணியில் உள்ள நிலையில் இச்சம்பவம் மூலம் இது நிரூபிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கனிமவளக் கொள்ளையினை தடுக்க முயன்ற சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் மாஃபியா கும்பலால் கொலை செய்யப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது. 2022ல் சமூக ஆர்வலர் ஜெகநாதன் படுகொலை. 2023 ல் கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் படுகொலை, 2025 ஜன17ல் சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை,2025 ஆகஸ்ட் தேனீ மாவட்டம் சதீஷ்குமார் படுகொலை என உ.பி, ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் சாதனை படைத்து வருகிறது.

சட்டவிரோத கனிமவளக் கொள்ளையை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற Down to Earth இதழ் நிருபர் M.சுசித்ரா, Asianet செய்தியாளர் VM தீபா ஆகியோர் 2014ல் மாஃபியா கும்பலால் தாக்கப்பட்டனர். கடற்கரை மணல் கொள்ளை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் அச்சுறுத்தலுக்கு உள்ளானார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இது போலவே ஏராளமான ஊடகவியலாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாகினர்.

தொடரும் இத்தகைய தாக்குதல்கள் பத்திரிகை சுதந்திரத்திற்கும், கருத்துரிமைக்கும் ஏற்பட்டு உள்ள பெரும் அச்சுறுத்தலாகும். ஜனநாயகத்தின் ஒரு தூணான ஊடகத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே நடத்தும் தாக்குதல் என்பது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட களங்கமாகவே பார்க்க வேண்டிய பரிதாபம் ஏற்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். தமிழக முதல்வர் இனியாவது இரும்புக் கரத்தை உபயோகிப்பாரா?

தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *