சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தமிழ்நாட்டில் இனாம் நில பிரச்னைக்கு தீர்வுகாண தனி ஆணையம் அமைக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

இனாம் நிலம் மற்றும் விவசாயிகளின் நில உரிமை பிரச்சனை

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

தமிழ்நாட்டில் சோழர், நாயக்கர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அரசர்கள் -கோயில், புலவர், போர்வீரர், மத நிறுவனங்கள் போன்றோருக்கு வரி இல்லாமல் அளித்த நிலங்களே இனாம் நிலங்கள். இவை மேஜர் இனாம் (முழு கிராமம்) மைனர் இனாம் (பகுதி நிலம்) என பிரிக்கப்பட்டு இருந்தன. 1963ல் தமிழ்நாடு இனாம் எஸ்டேட்ஸ் சட்டம் (ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி மாற்றம்) தமிழ்நாடு மைனர் இனாம்ஸ் சட்டம் மூலம் இனாம் முறை முழுமையாக ஒழிக்கப்பட்டு நிலங்கள் ரயத்துவாரி முறைக்கு மாற்றம் செய்யப்பட்டன.

உழுபவர்கள் (குத்தகைதாரர்கள், உரிமையாளர்கள்) தொடர்ந்து உழுது வந்தால் அவர்களுக்கு ரயத்துவாரி பட்டா வழங்கபட்டது. இதனால் இனாம் நில உரிமை அரசிடம் இருந்து விவசாயிகளுக்கு மாற்றப்பட்டது. இருப்பினும் இதனை முழுமையாக செயல்படுத்தாத நிலையில் தமிழ்நாட்டில் பிரச்னைகள் நீடித்து வருகிறது. குறிப்பாக பழைய வருவாய் பதிவுகள் (இனாம் ரிஜிஸ்டர்) இன்னும் இனாம் நிலம் என காட்டுவதால் பத்திரபதிவு துறை பதிவு செய்ய மறுக்கிறது. குறிப்பிட்ட நிலங்கள் ” ஜீரோ வால்யூ” என பட்டியலிடப்பட்டு உள்ளதால் குறிப்பிட்ட நிலம் விற்பனை/ வங்கி கடன்/அடகு வைக்க இயலாத நிலையே உள்ளது.

இந்துசமய அறநிலையத்துறை மற்றும் வக்ஃபு வாரியம் சில நிலங்களை தங்களுக்கானது என உரிமை கோரி பட்டா ரத்து அல்லது பதிவு தடை கோருகின்றன. இத்தகைய பிரச்னைகள் 1963 சட்டத்தின் அமலாக்கத்தில் உள்ள குறைபாடுகளால் ஏற்பட்டவை. இதனால் தமிழகத்தில் சுமார் 13 லட்சம் ஏக்கர் நிலத்தின் பயனாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 30 செப்டம்பர் 2025 ல் இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு குறிப்பிட்ட பிரச்னைக்கு தீர்வுகாண அரசு நடவடிக்கை எடுத்தது.

இதனால் திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பெரிதும் பயன்பெற்றனர். ஆனால் தமிழகம் முழுக்க உரிய நடவடிக்கை எடுக்க முடியாத வகையில் குறிப்பிட்ட நிலங்கள் ஆக்கிரமிப்புகள், மோசடிகள், உரிமை மறுப்புகள் நீடிக்கின்றன. இது ஒருபுறமிருக்க கரூர் உள்ளிட்ட பகுதிகளில் அறநிலையத்துறை தலையீட்டால் நில உரிமையாளர்கள் பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களின் மூலம் தங்கள் பிரச்னையினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நமது நாட்டில் கேரளா, ஆந்திரா, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் குறிப்பிட்ட இனாம் நிலப்பிரச்னையில் தீர்வு கண்டு உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் இப்பிரச்னை தீர்வு காணப்படாததால் விவசாயிகள் இதனால் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இத்தகைய நிலையினை போக்கிடும் வகையில் உரியசட்டதிருத்தம் மேற்கொள்வதோடு தனி ஆணையம் அமைத்து முழுமையாய் செயல்படுத்திட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *