சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை சுமார் 2709 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு சாய ஆலைகள், தோல் பதனிடும் ஆலைகள், இரும்பு உருக்கு ஆலைகள், ரசாயன ஆலைகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் -நீர்நிலைகளை மாசுபடுத்துவதோடு நிலத்தடி நீர் ஆதாரத்தையும் பாழாக்கி உள்ளது.
தொழிற்சாலை கழிவுநீர் நல்லா ஓடை வழியாக வரப்பாளையம் பகுதியில் உள்ள 18 ஏக்கர் பரப்பிலான ஓடைக் காட்டூர் குளத்தை வந்தடைகிறது. இங்கு 2007 முதல் ஆக்சிடேஷன் பாண்ட் செயல்படாத நிலையில் 5000 டன் கழிவு திட்டுகள் தேங்கி இப்பகுதி நச்சு நீர்தேக்கமாகிப் போனது. இதையடுத்த வாய்ப்பாடி கிராமத்தில் 15 ஏக்கர் பரப்பிலான கண்ணாய்க்காடு குளமும் கழிவுநீர் சங்கமித்து விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதுபோல் ரசாயன கழிவுநீர் கலந்து செங்குளம் சிவப்பு நிறமாக காட்சி அளிக்கிறது.
இதையடுத்துள்ள பால தொலுவு ஏரி 477 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதுவும் பயன்படுத்த முடியாததால் விவசாயமும், நிலத்தடி நீர்மட்டமும் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது.இதையொட்டி உள்ள ஈங்கூர், வெட்டுக் காட்டு வலசு, எழுதிங்கள் பட்டி, குட்டப்பாளையம், செங்குளம், லுடைக்காட்டூர், வாய்ப்பாடி, வரப்பாளையம் உள்ளிட்ட 50 கிராமங்களில் நீர் மாசுபட்டு உள்ளதால் ஆழ்துளை கிணறுகள் குடிப்பதற்கு உகந்தது அல்ல என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி உள்ள கிராமங்களில் பல லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தொழிற்சாலை கழிவுகளின் நீர் மற்றும் காற்று மாசு காரணமாக தோல், சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். இப்பகுதியில் புற்றுநோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இத்தகைய பாதிப்புகளால் இப்பகுதி வாழ தகுதியற்ற இடமாக மாறி வருகிறது.
குடிநீர் தேவைக்கு என தொழிற்சாலைகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தடையின்றி வழங்கப்படும் நிலையில் கிராம மக்களுக்கு விநியோகம் போதுமான அளவில் செய்யப்படுவது இல்லை. இதனால் நீர் தட்டுப்பாடு காரணமாக இப்பகுதி மக்கள் பரிதவித்து வருகின்றனர். தொழிற்சாலைகளில் தனிப்பட்ட மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தாலும் zero Liquid Discharge (ZLD) முழுமையாக பின்பற்றப்படவில்லை. அரசு தரப்பில் ஆய்வுகள், எச்சரிக்கை அறிவிப்புகள் இருந்தும் உறுதியான நடவடிக்கை போதுமானதாக இல்லை. இதனால் பெருந்துறை மட்டுமின்றி ஈரோடு, திருப்பூர் பகுதிகளும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு,ZLD கடுமையான அமலாக்கம், நீர்நிலைகள் மீட்டெடுப்பு செயல்படுத்த வேண்டியது இப்பகுதியின் அவசரத் தேவையாக உள்ளது.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply