சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
நகர்புறப் பகுதிகளில் வாகனங்கள், தொழிற்சாலைகள், தூசு உள்ளிட்ட காரணங்களால் காற்று மாசு அதிகரித்து மக்களுக்கு பெரும்பாதிப்பினை ஏற்படுத்துவதாக உள்ளது. இதனால் நுரையிரல் மற்றும் இதயநோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் உருவாகின்றன. தமிழ்நாட்டில் சென்னை. மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரப்பகுதிகளிலும் காற்று மாசு காரணமாக சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய பாதிப்புகளை தடுக்க நுண்பாசி திரவ மரங்கள் என்னும் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தலாம்.
செர்பியாவின் பெல்கிரேட் பல்கலைகழக விஞ்ஞானி Dr. இவான் ஸ்பாசோஜெவில் தலைமையில் உருவான LIQUID3 என்னும் திட்டமே நுண்பாசி திரவ மரம் எனப்படுவதாகும். ஒரு கண்ணாடி தொட்டியில் நுண்பாசியை வளர்க்கும் நகர்ப்புற ஒளிச்சேர்க்கை உலை எனலாம். இது சூரிய ஒளி அல்லது செயற்கை ஒளியில் நுண்பாசி ஒளிசேர்க்கை நடத்தி CO2ஐ உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுகிறது. துகள் மாசு, கன உலோகங்கள், கார்பன் போன்ற மாசுக்களை வடிகட்டுகிறது. உயிர்பொருளை உருவாக்குவதோடு இது உரமாகவும் பயன்படுகிறது.
நகர்புற காற்று மாசை குறைக்கவும், கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடவும் உருவாக்கப்பட்ட இந்த நுண்பாசிகள் உண்மையான மரங்களைப் போல செயல்படும் திறன் கொண்டவை. ஒரு வயது முதிர்ந்த மரம் அல்லது 200 சதுர மீட்டர் புல்வெளிக்கு சமமான செயல்பாட்டை இது செய்கிறது. இவை மரங்களை விட 50 மடங்கு வேகமாக வளர்ந்து அதிக திறனுடன் CO2 ஐ உறிஞ்சும் தன்மை கொண்டது. இது எல்லா கால நிலையிலும் தங்கள் பணியினை செய்கிறது.
நகர தெருக்களில் நவீன கலைப்பொருளாக அமைக்கப்பட்டால் கண்களையும் கவரும், சுற்றுச்சூழலுக்கும் நன்மை தரும். சிறிய இடத்தில் இவற்றை அமைப்பது எளிது. இதனால் மரம் நட முடியாத இடங்களிலும் இதனை எளிதில் அமைக்கலாம். பெருநகரங்களில் சாலை சந்திப்புகள், தொழிற்பேட்டை பகுதிகள், பூங்காக்கள், கடற்கரை, ஏரி உள்ளிட்ட அனைத்துப்பகுதியிலும் நிறுவலாம். இந்தியாவில் நொய்டா, போபால், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் இவை அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பெருநகரங்களில் அமைப்பதால் வாகனம்/ தொழிற்சாலை உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் காற்று மாசு அகலும்.
மரங்கள் மூலம் உயிர் பன்மை, நிழல், மண் பாதுகாப்பு உள்ளிட்ட பல நன்மைகள் ஏற்படும். இதற்கு நுண்பாசி திரவ மரங்கள் மாற்று ஆகாது. ஆனால் நகர்புற காற்று மாசு அதிகரிக்கும் இன்றைய சூழலில் தமிழ்நாட்டின் சுற்றுசூழல் பாதுகாப்பை உருவாக்கிட இத்தகைய நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது சிறந்த தீர்வாக அமையும். எனவே தமிழக அரசு மக்கள் நலன் காக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிபடுத்திடவும் இத்தகைய திட்டங்களை செயல்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply