சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

இராமநாதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான நடுகல் கல்வெட்டுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

2000 ஆண்டுகள் பழமையான இராமநாதபுரம் தமிழி நடுகல் கல்வெட்டு

நடுகல் என்பது தமிழர்களின் பழங்காலப் பண்பாட்டின் முக்கிய அங்கமாகும். போரில் வீரமரணம் அடைந்த வீரர்கள், ஊரை பாதுகாத்தவர்கள், கால்நடைகளை காத்து உயிர்துறந்தவர்கள் மற்றும் வீரச்செயலில் ஈடுபட்டு உயிர்நீத்தவர்கள் நினைவாக அமைக்கப்படும் நினைவு கற்களே நடுகற்கள். இவை தமிழகத்தில் சங்ககாலம் தொடங்கி, பல்லவர், சோழர், பாண்டியர் காலம் வழி தொடர்ந்த மரபாகும். தமிழகத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 80% நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவில் மிக பழமையான நடுகற்கள் தேனி மாவட்டம் புலிமான்கோம்பை மற்றும் தாத்தப்பட்டி ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. பொ.யு.மு. 4ம் நூற்றாண்டு காலத்தில் இது அமைக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கு முந்தைய காலத்தில் அமைக்கப்பட்ட நடுகல் சமீபத்தில் இராமநாதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது இராமனாதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் பழமையான தமிழி(தமிழ் – பிராமி) நடுகல் ஆகும். இங்குள்ள ஆப்பனூர் கிராமம் ஆண்டியேந்தல் பகுதியில் இந்த நடுகல் உள்ளது.

இங்குள்ள அரியநாச்சியம்மன் கோயில் குடமுழுக்குப் பணியின் போது மண்ணில் மூடிக்கிடந்த இந்த நடுகல் கிடைக்கப்பெற்றது. சுமார் 3.5 அடி நீளம் கொண்ட வெண்பாறைக்கல்லில் தமிழி எழுத்துக்கள் மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டு உள்ளது. ஆப்பனூரில் நடந்த போரில் வீரமரணம் அடைந்த அத்தியன் மகன் கீரன் என்பவரது நினைவாக இந்த நடுகல் அமைக்கப்பட்டு உள்ளது. மூத்த கல்வெட்டு ஆய்வாளர் சுப்பராயலு இந்நடுகல் பொ.யு.மு. 1ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தெரிவிக்கின்றார்.பாண்டிய மண்டலத்தின் மையப்பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் எழுத்து மரபு இருந்ததற்கான சான்றாக இது திகழ்கிறது.

சங்ககால தமிழர்கள் வீரர் வழிபாட்டு பண்பாடு, வரலாறு மற்றும் ஆரம்பகால எழுத்து அமைப்பை பற்றிய புதிய தகவலை இந்நடுகல் தருகிறது. இராமனாதபுரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தமிழிநடுகல் என்பதால் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. பல்வேறு கல்வெட்டுகள் பாதுகாப்பதில் உரிய கவனம் செலுத்தாததால் இயற்கை மற்றும் செயற்கை இடர்பாடுகளால் பலவற்றை இழந்தோம். மங்களம், பூலாங்குறிச்சி இதற்கு உதாரணங்கள். எனவே திறந்தவெளியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள குறிப்பிட்ட நடுகல் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டு உரியமுறையில் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.

கல்வெட்டுக்களை ஆன்லைன் தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்து டிஜிட்டல் ஆவணபாதுகாப்பு அளிப்பதோடு, கார்பன் டேட்டிங், பேலியோ கிராபி மூலம் துல்லியமான காலத்தை உறுதி செய்திட வேண்டும். தமிழ் வரலாற்று பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாக திகழும் இந்நடுகற்கள் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதோடு அதனை காத்து சுற்றுலா மற்றும் கல்வி மையமாக இப்பகுதியினை அரசு மேம்படுத்திட வேண்டும். இது தொடர்பாக இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் நடத்துவதோடு வரலாற்று உண்மைகள் வெளிப்படுத்தப் படவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *