சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
இந்தியாவில் சதுப்புநிலங்களைப் பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் 2017ல் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் wetlands ( Conservation and Management) Rules 2017 அறிவிக்கப்பட்டது. இது 2010 விதிகளை மாற்றியமைத்து அதிகாரங்களை வலுப்படுத்தியது. ராம்சார் உடன்படிக்கை அடிப்படையில் இயற்கை சதுப்பு நிலங்களின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. இந்தியாவில் அதிகமாக 20 ராம்சார் தளங்களை கொண்ட பகுதியாக தமிழகம் திகழ்கிறது. இதில் சென்னையின் பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதி 8.4.2022 அன்று ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது.
வெள்ள நீரை உறிஞ்சி நகரைப் பாதுகாக்கும் இயற்கை வடிகால் அமைப்பாகவும், உயிரினப் பன்முகத்தன்மை நிறைந்ததாகவும், சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்கும் முக்கியப் பகுதியாகவும் இது திகழ்கிறது.கடந்த 1960-70 களில் சுமார் 6000 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த இப்பகுதி நகரமயமாக்கல், ஆக்கிரமிப்பு, குப்பை கொட்டுதல் உள்ளிட்டவற்றால் தற்போது 890 ஹெக்டேர் அளவுக்கு பரப்பளவு சுருங்கிப்போனது. பள்ளிக்கரணை போன்ற சதுப்புநிலங்களைப் பாதுகாப்பது சென்னையின் எதிர்கால பாதுகாப்பிற்கும், உயிரியல் பன்முகத்தன்மைக்கும் அவசியத் தேவையாகும்.
இச்சூழலில் பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநில எல்லைக்குள் பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் என்ற தனியார் நிறுவனம் ரூ.2000 கோடி மதிப்பில் 1250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்திற்கு தி.மு.க அரசு அனுமதி அளித்தது. EC ன் நிபந்தனை எண்.09 (part D) ன் படி இது சட்டவிரோதமாகும். மேலும் தமிழ்நாடு மாநில சதுப்புநில ஆணையத்தின் உரிய அனுமதி இல்லாமல் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டன. ராம்சார் பாதுகாக்கப்பட்ட சதுப்பு நில எல்லைக்குள் அவசரகதியில் இதற்கான அனுமதி அளிக்கப்பட்டது.
சதுப்புநில எல்கைக்குள் நடைபெறும் கட்டுமானம் சென்னையின் வெள்ள வடிகால் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும். இதனால் சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்பதால் குறிப்பிட்ட திட்டப்பணிகள் நிறைவேற்றுவதற்கு சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்தது. Wetland C conservation Rules. 2017 மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி மேற்கொள்ளப்படும் இப்பணிக்கு தடை விதித்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியினை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ரத்து செய்து உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்ட இத்தகைய முடிவினை வரவேற்கின்றோம். மேலும் இதற்கான CMDA அனுமதியினையும் ரத்து செய்வதோடு இச்சட்டவிரோத செயல்பாடு குறித்து விசாரணை நடத்தி அதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply