சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிர் பன்மை நிறைந்தது தேனி மாவட்டம் மேகமலை பகுதியாகும். அழகிய, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் தேயிலை தோட்டங்கள், அருவிகள், அடர்ந்தகாடுகள், புவியினை முத்தமிடும் மேகங்கள், முகம் மூடிய மங்கையாய் திரைபோடும் மூடுபனி என கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் இயற்கை அழகு கொட்டிக்கிடப்பதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு பூவை மொய்க்கும் தேனீக்களாய் சங்கமிக்கின்றனர். கடந்த 2021ல் இப்பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்துடன் இணைக்கப்பட்டது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கொண்டுவரும் நெகிழிப்பைகள், உணவு பொட்டலங்கள், வீசப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு உள்ளது.
குமுளி – தேனி சாலையில் மேகமலை அடிவாரப் பகுதியில் மலைபோல் குப்பைகள் குவிக்கப்பட்டு உள்ளது. திறந்த வெளியில் பல ஆண்டுகளாக குப்பைகள் இங்கு கொட்டப்படுவதால் இதன்மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. முறையற்ற கழிவு மேலாண்மையினால் நிலத்தடி நீர் மற்றும் நீர் ஆதாரங்கள் பாதிக்கும் நிலை உள்ளது. நெகிழிகள் மண்ணில் மட்காததால் நிலம் மலடாகிறது. மழைநீர் ஊடுருவல் குறைந்து மண் அரிப்பு அதிகரிக்கும் சூழலே நிலவுகிறது. மக்கும் குப்பைகளில் இருந்து மீத்தேன் வாயு வெளியாகி புவிவெப்பமடைவுக்கும் பங்களிக்கிறது.
யானை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் குப்பைகளை உண்பதால் அவற்றின் உடல்நலம் சீர்கெடுகிறது. மேலும் இதனால் அவை உயிர் இழப்பதால் உணவுச்சங்கிலியே பாதிக்கப்படும் பேராபத்து உள்ளது. எரிக்கப்படும் குப்பைகளில் இருந்து வெளியாகும் நச்சுவாயுக்களால் காற்று மாசு ஏற்படுவதோடு காட்டுத்தீ ஏற்படும் அபாயமும் உள்ளது. இயற்கைச் சூழல் பாதிக்கப்படுவதோடு சுற்றுலா தலத்தின் அழகும் சீர்குலையும் நிலை உள்ளது. குப்பைகள் மூலம் எலி, கொசுக்கள் உள்ளிட்ட உயிரினங்கள் பெருகி பல நோய்கள் பரவுதலுக்கும், பாதிப்புகளுக்கும் காரணமாகிறது.
எனவே பல்வேறு வகையில் சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்திற்கும் பெரும் தீங்கினை ஏற்படுத்தி வரும் மேகமலை அடிவாரப் பகுதியில் உள்ள குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அகற்றப்பட்டு மறுசுழற்சிக்கு பயன்படுத்திட வேண்டும். மேலும் இப்பகுதியின் முக்கியத்துவத்தை கருதி மேலும் இங்கு குப்பைகள் கொட்ட தடை விதிக்கப்பட வேண்டும். தொடர்ந்து வனத்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சி நிர்வாகம் கண்காணித்து மீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
குப்பைகளை கையாளும் கழிவு மேலாண்மை முறையாக அமல்படுத்தப்பட வேண்டும். சுற்றுலாப்பயணிகள் கொண்டு வந்ததை திருப்பி எடுத்துச் செல்லுதல் (Trash in- Trash out) விதியினை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேகமலை போன்ற உணர்வுபூர்வமான பகுதிகளை பாதுகாக்க Reduce, Reuse, Recycle என்ற கொள்கையினை கடைபிடிப்பதின் மூலமே அதனை உயிர் தன்மையோடு காக்க முடியும். இது அரசியல் பிரச்னை அல்ல அனைவருக்குமான பிரச்னை என்பதை உணர்ந்து சுற்றுசூழலை பாதுகாப்பதில் ஒவ்வொருவரும் பங்களிப்போம்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply