சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தமிழகத்திற்கு பாதிப்பை உருவாக்கும் தொகுதி மறுசீரமைப்பு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு மூலம் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம்

நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது 543 ஆக இருக்கும் நிலையில் அரசியல் அமைப்பின் 81வது பிரிவில் திருத்தம் மேற்கொண்டு 850 ஆக அதிகரிக்க மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது. இதற்கான சிறப்பு கூட்டத் தொடர் 16ந்தேதி தொடங்கியது. தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள தனி ஆணையம் அமைக்கப்படுவதாகவும் வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் திருததி அமைக்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையில் தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2001 ல் மறுவரையறை செய்யவேண்டிய நிலை ஏற்பட்ட போது இதனால் தென்மாநிலங்கள் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும் என்பதால் தள்ளிவைக்கப்பட்டது. குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுத்தியதால் மக்கள்தொகை எண்ணிக்கை கட்டுபடுத்தப்பட்டது.

வடமாநிலங்கள் இவ்விஷயத்தில் சரிவர செயல்படுத்தாததால் மக்கள்தொகை எண்ணிக்கையில் அதிகமாக உள்ளது. எனவே மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால் தென்மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும். அல்லது விகிதாச்சாரத்தில் பின்தங்கும். குறிப்பாக மக்கள்தொகை அடிப்படையில் 39 தொகுதிகள் 31 ஆக தமிழகத்தில் குறையலாம். தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் இதனால் 24% லிருந்து 19% ஆக குறையும்.

இதற்கு மாற்றாக 50% இடங்கள் உயர்வு அளித்து பாதிப்பை போக்குவோம் எனக் கூறுவதும் ஒரு ஏமாற்று தவிர வேறில்லை. உத்தரபிரதேசத்தில் 80 எம்.பிக்கள் உள்ளனர். தமிழகத்தில் 39 பேர் உள்ள நிலையில் இருமாநில இடைவெளி 41. ஆனால் 50 உயரும் போது உத்தரபிரதேசத்திற்கு 120, தமிழகத்திற்கு 58 இப்போது இடைவெளி 62 என்றாகிறது. தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட தென்மாநிலங்களின் எம்.பிக்கள் எண்ணிக்கை 129ல் இருந்து 194 ஆகும். அதுவே உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், டெல்லி ஆகிய வடமாநிலங்களின் எம்.பி எண்ணிக்கை 225 ல் இருந்து 340 ஆக உயர்ந்து விடும்.

இதன் மூலம் முன்பு இருந்த இடைவெளி 96 ல் இருந்து 146 ஆக மாறுகிறது. ஏற்கனவே தமிழகம் மத்திய அரசுக்கு வழங்கும் ஒவ்வொரு ஒரு ரூபாய் வரிபணத்திற்கும் வெறும் 29 காசுகள் மட்டுமே திரும்ப கிடைக்கிறது. ஆனால் உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 2 ரூபாய்க்கு மேல் கிடைக்கிறது. தொகுதி மறுசீரமைப்பினால் இன்னும் அதிக நிதி வடமாநில தொகுதிகளுக்கு செல்வதால் நாம் நிதி இழப்பினை சந்திக்க நேரிடும்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை வடமாநிலங்கள் அளிக்கும் நிலை உள்ளதால் தென்மாநிலங்களின் 194 எம்.பிக்கள் ஒருங்கிணைத்து மக்களுக்கு விரோதமான சட்டம் என எதிர்த்தாலும் அவர்களது குரல் அங்கீகாரம் இல்லாமல் போகும் என்பதால் அரசியல் அதிகாரத்தை இழக்கும் நிலை உள்ளது. இதனால் தமிழகம் மட்டுமில்லாது தென் மாநிலங்கள் பெரிதும் பாதிப்பு அடையும் நிலை உள்ளதால் வடக்கு-தெற்கு என்ற பிரிவினை உருவாகும் பேராபத்து உள்ளது. எனவே கூட்டாட்சி தத்துவத்திற்கு குந்தகம் விளைவிக்காமல் தென்மாநிலங்களுக்கும் உரிய நிதி பகிர்வு, பிரதிநிதித்துவம் அளித்திடும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *