சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரன். வருண குலத்தான் வரலாறு மறைக்கப்பட்டது ஏன்? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

வரலாற்றில் மறைக்கப்பட்ட வருண குலத்தான் சுதந்திர போராட்ட வீரர் நினைவு

வருண குலத்தான் 17ம் நூற்றாண்டில் தஞ்சாவூரில் ஆட்சி புரிந்த ரகுநாத நாயக்க மன்னரின் படைத்தளபதி. வருணன் எனப்படும் கடல் தெய்வத்தை வழிபடும் பரதவர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இப்பெயர் உருவானது. யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர் சங்கிலி குமாரன் போர்த்துக்கீசிய படையெடுப்பை தொடர்ந்து ரகுநாத மன்னர் உதவியை நாடினார்.அவர் வருண குலத்தான் தலைமையிலான படையினை அனுப்பி வைத்தார். கொரில்லாப் போரில் மிகவும் தேர்ச்சி பெற்ற வருண குலத்தான் துப்பாக்கி, பீரங்கிப் படைகளுக்கு எதிராக துணிச்சலுடன் போராடினார்.

இவரது அபாரமான எதிர்ப்புக்கு போர்த்துக்கீசிய வீரர்களால் தாக்குபிடிக்க முடியவில்லை. 1616 முதல் 1621 வரை இப்போர் நடந்தது.

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். 1621 பிப்ரவரி 11ந்தேதி பனந்தோப்பு பகுதியில் நடைபெற்ற இறுதிகட்டப் போரில் போர்த்துக்கீசிய வீரர்களால் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தார். இறந்த பின்பும் ஆத்திரம் அடங்காமல் வருண குலத்தான் தலையினை வெட்டி மரக்கிளையில் தொங்க விட்டனர்.

போர்த்துக்கீசியர்கள் தங்கள் எதிரியை புகழ்ந்து எழுதுவது அரிது. ஆனால் அவர்கள் தங்கள் ஆவணங்களில் வருண குலத்தானை Great Enemy என குறிப்பிட்டு உள்ளனர். இது அவரது வீரத்தையும், போராட்டத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. மேலும் அவர்கள் வருண குலத்தானை கடல் மாமன்னன் எனவும் வங்காள விரிகுடாவின் சுறா எனவும் கரையர்களின் அரசன் எனவும் குறிப்பிட்டு உள்ளனர். அவரது தோற்றம் பெரிய தலை, பாதி வழுக்கை, நீண்ட அழகான சாம்பல் நிறத்தாடி கொண்டதாக வரலாற்று குறிப்புகள் கூறுகிறது.

அவரது வீரம் தமிழ் வரலாற்றில் காலனிய எதிர்ப்பின் அடையாளமாக நினைவு கூறப்படுகிறது. வரலாற்று பக்கங்களில் அவரது வீரச்செயல்பாடுகளால் வாழும் இந்த மாவீரன் பற்றி நாம் ஏனோ நினைக்க மறந்து போனோம். எனவே அவரது நினைவை போற்றுவதின் மூலம் மறைக்கப்பட்ட வரலாறு உயிர்ப்பிக்க உதவும். நாகப்பட்டினம் பகுதியில் இவரது நினைவு சின்னம் அமைக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் இவர் வரலாறு இடம்பெற வேண்டும்.

தமிழ்ப்பல்கலைகழகம் அல்லது வரலாற்று ஆராய்ச்சி மையம் மூலம் அவர் குறித்த போர்த்துக்கீசிய ஆவணங்கள், குவரேஸ் பாதிரியார் குறிப்புகள் உள்ளடங்கிய வரலாற்றை ஆவணப்படுத்தப்பட வேண்டும். சென்னை அல்லது தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் அவருக்கு தனிப்பிரிவு அமைக்க வேண்டும். மீனவர் நலன், கடல் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலனிற்காக போராடும் வீரர்களை கெளரவப்படுத்திடும் விதத்தில் வருண குலத்தான் விருது வழங்கப்பட வேண்டும். அவரது நினைவைப் போற்றுவது வரலாற்று நீதி, கலாச்சார பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மேம்படுவதற்கு அடித்தளமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *