சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

அரசு திட்டங்களுக்காக மரங்களை வெட்டுவதில் காட்டும் வேகத்தை ஈடாக மரங்கள் நடுவதில் அரசு காட்டுவதில்லை – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் சாலை மற்றும் அரசு திட்டங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவது மற்றும் அதன் சுற்றுச்சூழல் விளைவுகள்

தமிழ்நாட்டில் சாலை விரிவாக்கம், மெட்ரோ பாலங்கள், தொழிற்பேட்டைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களுக்காக லட்சகணக்கான மரங்கள் வெட்டப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு ஈடாக எவ்வளவு மரங்கள் இதுவரையில் நடப்பட்டு அவை உயிர்ப்புடன் உள்ளன என ஆய்வு செய்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக பலமடங்கு மரக்கன்றுகள் நடவேண்டும் என CAMPA (Compensatory Afforestation Fund management and planning Authority) விதி உள்ளது. வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஈடாக 10 மரகன்றுகள் வளர்த்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு பசுமை தமிழ்நாடு மிஷன் மூலம் வனப்பரப்பை 23.69% ல் இருந்து 33% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்து உள்ளது. இதற்கென பல்வேறு திட்டங்கள் மூலம் மரக்கன்றுகள் தரிசு நிலங்களில் நடப்படுகிறது. மேலும் வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை மூலம் நடப்படுகிறது. இவ்வகையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 10.86 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இவற்றில் எத்தனை உயிரோடு உள்ளது என பார்த்தால் 50% கூட தேறாது என்பதே பதிலாக இருக்கும்.

அவினாசி- மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கத்திற்கு என 1819 மரங்கள் வெட்ட அனுமதி அளித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இதற்கு ஈடாக 4770 மரங்களை நட உத்தரவிட்டது. ஈ.சி.ஆர் (கோட்டிவாக்கம்- சோளிங்கநல்லூர்) சாலை விரிவாக்கத்திற்கென சுமார் 1000 மரங்கள் வெட்டப்படுகிறது. சென்னையில் சர்தார் படேல் சாலை விரிவாக்கத்தின் போது பழமைவாய்ந்த மரங்கள் உள்ளிட்ட 100 மரங்களுக்கு மேல் வெட்டப்பட்டன. இதுபோன்றே தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் சோலை சூழ்ந்து நின்ற சாலைகள் மரங்கள் வெட்டப்பட்டு பாலை சூழ்ந்து காட்சி அளிக்கின்றன.ஈடாக வைக்கப்படும் மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படாததாலும், பாதுகாக்கப்படாததாலும் அதனால் எந்த பலனும் இல்லாத சூழலே உள்ளது.

உள்கட்டமைப்பு உள்ளிட்ட வளர்ச்சி தேவை தான். ஆனால் அதற்கென சுற்றுச்சூழல் பாதுகாப்பை புறக்கணிப்பது மோசமான விளைவுகளையே உருவாக்கும். பழமையான மரங்களின் நிழல், பல்லுயிர் பாதுகாப்பு, கார்பன் உறிஞ்சல், உள்ளிட்ட பல்வேறு சூழலியல் பயன்களை புதிய மரக்கன்றுகளால் ஈடுசெய்ய இயல்வது இல்லை. மேலும் அதிகப்படியான மரங்கள் அழிப்பு பருவகால மாற்றம், மழை குறைபாடு, மண் அரிப்பு, நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு, வறட்சி, குடிநீர் பஞ்சம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளையே நமக்கு பரிசாக தருகிறது.

இருப்பினும் இவை எதைப்பற்றியும் கண்டு கொள்ளாததால் எந்த திட்டம் என்றாலும் முதலில் கொலை செய்யப்படுவது மரங்களாகத்தான் இருக்கின்றன.. CAMPA நிதியில் சுமார் 60% மட்டுமே மரவளர்ப்புக்கு என தமிழ்நாடு பயன்படுத்துவதாக செய்தி வெளியாகிறது. இது நாம் இவ்விஷயத்தில் உள்ள அக்கறையின்மையே காட்டுவதாய் உள்ளது. மரங்கள் வெட்டப்படுவதை குறைக்க சாலை விரிவாக்கத்தின் போது ஒருபக்கம் நிலம் கையகப்படுத்தி மறுபக்கம் மரங்களை விட்டுவிடலாம். வெட்டப்படுவதற்கு மாறாக அவற்றை இடமாற்றம் (Transplant) செய்யலாம். ஈடாக மரகன்றுகள் நடுவதோடு நிறுத்திவிடாமல் அதனை பராமரித்து தொடர்ந்து கண்காணிப்பு செய்திட வேண்டும். மனிதன் இன்றி மரங்கள் வாழும்…மரங்கள் இன்றி மனிதன் உயிர்வாழ இயலாது.. என்பதை நாம் உணர்வது எப்போது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *