சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

60 ஆண்டுகள் ஆகியும் செண்பகவல்லி அணை சீரமைக்கப்படாததால் விவசாயிகள் பரிதவிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தென்காசி அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செண்பகவல்லி அணை மற்றும் பாதிக்கப்பட்ட பாசன பகுதி

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சொக்கம்பட்டி குன்றின் அடிவாரத்தில் அமைந்து உள்ள வரலாற்று சிறப்புமிக்க தடுப்பணையே செண்பகவல்லி அணை. சிவகிரி அடர் வனப்பகுதியில் ஆண்டு முழுவதும் பெருக்கெடுத்து கடலில் வீணாக கலந்து வந்த நீரை மக்கள் பயன்படுத்தும் நோக்கில் 1773ல் சிவகிரி ஜமீன்தார் வரகுண சங்கரபாண்டியன் அன்றைய திருவிதாங்கூர் கேரள மன்னருடன் ஒப்பந்தம் செய்தார். இதன்படி மேற்கே கன்னிமார் ஆற்றில் ஓடி 30 கி.மீ தூரத்தில் இடுக்கி மாவட்டம் முல்லைபெரியாரில் கலந்த நீரை கிழக்கு முகமாக திருப்பப்பட்டு செண்பக வல்லி கால்வாய் ஏற்படுத்தப்பட்டது.

புளியம்பட்டி தோடு மற்றும் சொக்கம்பட்டி தோடு ஆகிய இரு ஓடைகள் சங்கமிக்கும் இடத்தில் தேவியாறு, பேச்சி கோவிலாறு, உள்ளாறு, ஈச்சன் ஓடை, சாகநதி, நிச்சநதி உள்ளிட்ட சிற்றாறுகள் சேரும் பகுதியில் செண்பக வல்லி அணை 40 சதுர கி.மீ பரப்பளவில் கட்டப்பட்டது. சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்ட இந்த அணையின் நீளம் சுமார் 2531 அடி. உயரம் 15 அடியாகும். இந்த அணையில் இருந்து கன்னிகா மதகு கால்வாய் வழியாக தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 36 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு நீர் வழங்கியது.

குலசேகரப் பேரி, ராசிங்கப் பேரி உள்ளிட்ட ஏரிகளுக்கு தண்ணீர் சென்ற நிலையில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பெரும் ஆதாரமாக இருந்தது. 1955ல் இந்த அணையில் ஏற்பட்ட சேதம் தமிழக அரசால் சீரமைக்கப்பட்டது. 1967ல் பெருவெள்ளத்தில் சுமார் 30 மீட்டர் அளவிற்கு உடைப்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக இருந்த போது சீரமைப்புக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு செலவினத் தொகை கேரள அரசிடம் அளிக்கப்பட்டது. ஆனால் கேரள அரசு குறிப்பிட்ட நீர்வழிப்பாதை முல்லை பெரியாறு அணைக்கு திருப்பி விடப்பட்டதாக கூறி சீரமைப்பு பணிக்கு முட்டுகட்டை போட்டது. இதனால் கடந்த 60 ஆண்டுகாலமாக குறிப்பிட்ட அணை சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது.

இந்த அணை சீரமைக்கப்பட்டால் தென் தமிழ்நாட்டில் பாசனம், குடிநீர், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக மேம்படும். ஆனால் தமிழகம் – கேரளம் ஆகிய இரு மாநிலம் தொடர்பு உடையது என்பதால் செண்பகவல்லி அணை இதுவரை அக்கறை காட்டப்படாத நிலையில் உள்ளது. முல்லைப்பெரியாறு போன்று இந்த அணை பேசப்படாததால் இந்த அணையின் பாதிப்பு வெளி உலகிற்கு தெரியாமல் தீர்வு ஏற்படாத நிலையில் உள்ளது. இருப்பினும் விவசாயிகளின் முக்கிய ஆதாரமாக இருந்த போதும் அணை சேதாரம் சரிசெய்யப்படாததால் பல லட்சம் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையே நீடிக்கிறது.

குறிப்பிட்ட அணை சீரமைப்பு தொடர்பாக நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் இதுவரையில் விமோசனம் பெறாத நிலையில் விவசாயிகள் விடியலை எதிர்நோக்கி உள்ளனர். தமிழகத்தில் த.வெ.கா-காங். உடன் கூட்டணி ஆட்சி நடைபெறும் சூழலில் கேரள முதல்வருடன் தமிழக முதல்வர் பேசி செண்பகவல்லி அணை தொடர்பாக சுமூக உடன்பாட்டிற்கும், சீரமைப்பிற்கும் வழிவகை ஏற்படுத்திட வேண்டும். அணையில் மட்டுமல்ல இருமாநில நல்லுறவில், விவசாயிகள் நலனில் ஏற்பட்ட உடைப்பு இனியாவது சீரமைப்புக்கு உள்ளாக்க வேண்டும்..மக்கள் நலனை மனதில் கொண்டு தமிழக முதல்வர் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தமிழக மக்களின் வேண்டுகோளாகும்.

விவசாயிகள் பிரச்சனைகள் தமிழ்நாடு
தமிழகம் கேரளா நீர்விவகாரம்
பாசன வசதி மற்றும் விவசாயம்
தென்காசி செண்பகவல்லி அணை. தமிழ்நாடு அணைகள் மற்றும் நீர்வள செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *