சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

நாமக்கல் மாவட்டத்தில் ஜாதிப் பாகுபாடுடன் செயல்படும் அங்கன்வாடி மையங்கள் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் மீது ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படும் நிலை

தமிழ்நாட்டில் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து குழந்தைகளுக்கும் ஊட்டசத்து, கல்வி இதனை உறுதிபடுத்துவதே இதன் நோக்கம். ஆனால் பிஞ்சிலேயே நஞ்சை விதைப்பது போல சில பகுதிகளில் குழந்தைகளை ஜாதி ரீதியாக பாகுபாடு காட்டி அவர்களை பராமரிப்பதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாகவே உள்ளன. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் காக்காவேரி ஊராட்சிக்கு உட்பட்ட காக்காவேரி பகுதியில் 300 குடும்பங்கள் உள்ளது.இதையடுத்த புதுக் காலனி, புதுக்காலனி வளவு பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 400 குடும்பங்கள் உள்ளன.

புதுக் காலனி செல்லும் பாதையில் இரு அங்கன்வாடி மையங்கள் பத்தடி இடைவெளியில் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு மையத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளும், மற்றொரு மையத்தில் பட்டியலின பிரிவைச் சேர்ந்த குழந்தைகளும் பயின்று வருகின்றனர். இரு மையங்களுக்கும் தனித்தனி சமையல் அறை, கழிப்பறை, அமைப்பாளர் மற்றும் சமையலர் உள்ளனர். பட்டியலின சமூக குழந்தைகள் பயின்று வரும் மையத்தில் அதே சமூகத்தை சேர்ந்தவர் சமையலராக உள்ளார்.

ஜாதி பாகுபாடுடன் குறிப்பிட்ட பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும் நிலையில் இதுவரையில் இதனை போக்கிட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்தகைய பிரிவினை ICDS விதிகளுக்கும், இந்திய அரசியல் சட்டத்திற்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் எதிரானது. குழந்தைகள் மத்தியில் ஜாதி ரீதியாக பாரபட்சத்தை ஏற்படுத்தும் இத்தகைய போக்கினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வலையபட்டியில் அங்கன்வாடி மையத்தில் பட்டியலின பெண்கள் இருவர் பணியாளர்களாக கடந்த 2019ல் நியமிக்கப்பட்டனர். ஆதிக்க ஜாதியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டியிலின பெண் சமைத்த உணவை தங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் எனக் கூறினர். இதைத் தொடர்ந்து மறுநாளே இருவரும் வேறு அங்கன்வாடி மையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இவ்வாறு அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் குறித்த சாதி பாகுபாடு இருந்த நிலையில் ஆங்காங்கே குழந்தைகளை பிரித்தல், வாய்மொழியாக தாக்குதல் இருப்பதாக புகார்கள் வருகின்றன. இருந்தும் முழுமையாக ஜாதி ரீதியாக தனித்தனி பணியாளர்கள், சமையலர், குழந்தைகள் என பிளவுபடுத்துவது தற்போது வெளிவந்து உள்ளது நாகரிக சமூகத்திற்கும், சமூக நீதிக்கும் பங்கம் ஏற்படுத்துவதாகவே உள்ளது. தீண்டாமை ஒரு பாவச்செயல், அது சட்டவிரோதம் என பயிற்றுவிக்கும் ஒரு பயிலரங்கமே சமூக ஒற்றுமையினை சீர்குலைப்பது உடனடியாக களையப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *