சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க வாக்காளர் பட்டியலில் குளறுபடி – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க வாக்காளர் பட்டியலில் குளறுபடி

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் தேர்தல்கள் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 1983 மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் விதிகள் 1988 ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகின்றன. தேர்தல் நடத்தையின் முழு மேற்பார்வை தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் வசம் உள்ளது. 18,775 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் கடந்த 2018 ல் 5 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில் மீன்வளத்துறை சார்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவர் சங்கங்களும் அடங்கும். பொதுவாக கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். இதன்படி 2023ல் தேர்தல் நடைபெற்று இருக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்களில் போலி உறுப்பினர்கள் பெருமளவில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், குறுக்குவழியில் வெற்றி பெறுவதற்காக திட்டமிட்டே தகுதியான உறுப்பினர்களை நீக்கம் செய்து உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் தமிழகம் முழுவதும் மீனவர் சங்கங்கள் சார்பில் நீர்நிலைகளில் மீன்பிடி / வளர்ப்பு உரிமை தொடர்பாக 100க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் குறிப்பிட்ட தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. சங்கங்களில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு நிர்வகித்து வருகின்றனர். இப்பிரச்னை தொடர்பாக தீர்வு எட்டுவதற்காக சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு நான்கு மண்டலக்குழுக்களை அமைத்தது.

தென்மண்டலக் குழுவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி R.S.ராமனாதன் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 27.8.2018 அன்று இதனை அறிவிப்பாக அரசு வெளியிட்டது. குறிப்பிட்ட குழு 3.8.2018 வரையிலான புகார்கள் மற்றும் ஆட்சேபனைகளை விசாரணை நடத்தியதுடன் தேர்தல் முறைகேடுகளை தவிர்க்க வாக்காளர் பட்டியல் திருத்தத்தினை பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து 2024ல் கூட்டுறவு சங்கங்களில் தகுதியற்ற உறுப்பினர்கள் நீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 44 லட்சம் பேர் தகுதியற்ற உறுப்பினர்கள் ஆக தேர்வு செய்யப்பட்டு நீக்கப்பட்டனர். சுமார் 62 லட்சம் உறுப்பினர்கள் ஆதார் மற்றும் ரேஷன்கார்டு இணைக்கப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

கூட்டுறவு சங்க தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை கூட்டுறவு சங்கங்களின் துறைகள் அறிவித்து வருகின்றனர். இதன்படி குமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க வாக்காளர் பட்டியலும் மீனவர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் தகுதி உள்ள பல்வேறு உறுப்பினர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதோடு உயிரோடு இருப்பவர்களையும் இறந்ததாக கருதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. தோவாளை உள்நாட்டு மீனவர் சங்கத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பலரும் இதுதொடர்பாக குறிப்பிட்ட துறையினரிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே நேர்மையான முறையில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறவும், அடிப்படை ஜனநாயகத்தை பாதுகாக்கவும், தகுதி உடையவர்கள் பாதிப்பு அடைவதை தவிர்க்கவும் வாக்காளர் பட்டியலில் நடைபெற்று உள்ள குளறுபடிகள் தொடர்பாக விசாரணை நடத்தி உண்மையான பட்டியலை வெளிப்படையாக தெரிவித்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, துணை செயலாளர் Rசாராபாய், மீனவர் அணிச் செயலாளர் A. ததேயுஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மீனவர் கூட்டுறவு சங்க வாக்காளர் பட்டியலில் தவறுகள்: விசாரணை கோரிக்கை
தகுதியான உறுப்பினர்கள் நீக்கம்: குமரி மீனவர் சங்கத்தில் சர்ச்சை
கூட்டுறவு சங்க தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியல் குளறுபடி
உயிருடன் உள்ளவர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்களா?
மீனவர் சங்க தேர்தல் வெளிப்படையாக நடைபெறுமா?
குமரி மாவட்ட மீனவர் சங்கங்களில் ஜனநாயகத்திற்கு சவாலா?
வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு குற்றச்சாட்டு
கூட்டுறவு சங்க தேர்தலுக்கு முன் புதிய சர்ச்சை
மீனவர் சங்க உறுப்பினர்கள் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
உண்மையான வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும்: சமூக பொதுநல இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *