சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கோனா கார்பஸ் அமெரிக்காவின் கடலோர சதுப்புநிலங்களில் இருந்து வந்த அந்நிய அலங்கார மரம். இது மிக வேகமாகவும், அடர்த்தியாகவும் வளரும். ஆனால் இம்மரம் சுற்றுச்சூழலுக்கும், உடல்நலனுக்கும் பல்வேறு தீங்கு விளைவிப்பதாகும். இம்மரம் அதிக அளவு நீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை. ஒரு மரம் பல நூறு லிட்டர் நீரை தினமும் உறிஞ்சுவதால் சுற்றி உள்ளப் பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றச் செய்கிறது.இது குடிநீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது.
இம்மரத்தின் மகரந்ததூள் மிகவும் ஆபத்தானது. இதன்மூலம் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, அலர்ஜி, தோல் நோய்கள், சுவாசப் பிரச்னைகள் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகள், முதியோர் மற்றும் சுவாசம் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு பெரும் பாதிப்பை அளிக்கிறது.இம்மரத்தின் வேர்கள் மிக வலுவானவை என்பதால் குடிநீர் குழாய்கள், வடிகால்கள், சாலைகள். வீட்டின் அடித்தளங்களை உடைத்து சேதப்படுத்துகின்றன.
பறவைகள், தேனீக்கள், வனவிலங்குகள் இந்த மரத்தை உணவாகவோ, வாழிடமாகவோ பயன்படுத்துவது இல்லை. உயிரினப் பன்முகத்தன்மையை அழிப்பதோடு மண்வளத்தையும் பாதிக்கிறது. இக்காரணங்களால் ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் இம்மரங்களை வளர்க்க தடை விதித்தது. தமிழ்நாடு அரசு கடந்த 11.1.2025 அன்று அதிகாரப்பூர்வமாக தடை விதித்தது. தமிழகத்தில் கோனா கார்பஸ் மரகன்றுகளை நடக்கூடாது எனவும் ஏற்கனவே உள்ள மரங்களை அகற்றி பாரம்பரிய உள்ளூர் மரங்களை நடவேண்டும் எனவும் அறிவித்து இருந்தது.
ஆனால் இதற்கு நேரெதிராக தமிழகத்தின் நான்குவழிச் சாலைகளின் நடுப்பகுதி மற்றும் சாலை ஓரங்களில் பல இடங்களில் நடப்பட்டு உள்ளன. இவை தற்போது பூத்துக் குலுங்குவதோடு குறிப்பிட்ட பகுதியில் வறட்சியினை ஏற்படுத்துவதோடு, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் உள்ளன. இதனால் பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. குறிப்பாக பொள்ளாச்சி, நல்லாம் பள்ளி, ஒட்டன்சத்திரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாநிலத்தின் பல இடங்களில் இம்மரங்கள் சாலையில் நிற்பதை பார்க்க முடிகிறது.
தமிழக அரசின் தடைகளை மீறி வளர்க்கப்படும் இம்மரங்கள் பல்லுயிர் இழப்பிற்கும், சுற்றுச்சூழல் பாதிப்பிற்கும் அடிவேராய் இருப்பதால் அந்நிய இம்மரங்களை அகற்றி வேம்பு, பலா, வேங்கை, உசில், குமிழ், ஆல், மா, அரசு, புளி, நாவல், இலுப்பை, மருதம், தாண்டி, புங்கை, செண்பகம், நெல்லி, மகிழம், கருங்காலி, ஆத்தி உள்ளிட்ட நமது நாட்டு பூர்வீக மரங்களை நடவேண்டும்.இவை நமது தட்பவெப்பநிலை, மண்வகை மற்றும் சுற்றச்சூழலுக்கு பொருந்தி வளரும். இவற்றினால் உயிரினப் பன்முக தன்மை அதிகரிக்கும். பறவைகள், தேனீக்கள், வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் வாழிடம் அளிக்கும். நிலத்தடி நீரை பாதுகாக்கும். காற்று மாசை குறைக்கும். பழம், மருத்துவம்/நிழல், பொருளாதாரம் உள்ளிட்ட பயன்களும் நமக்கு அளிப்பதற்கு வழிவகுக்கும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply