சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

நாமக்கல்லில் அறிவிப்போடு முடங்கிய ஆகாய கங்கை ரோப்கார் திட்டம் செயல்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

நாமக்கல் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவிக்கான ரோப்கார் திட்டம்

வானத்தில் இருந்து வெள்ளியை உருக்கி விட்டது போன்ற கொள்ளை அழகுடன் மனதை கொள்ளை கொள்வது ஆகாய கங்கை அருவி. நாமக்கல் மாவட்டத்தில் கிழக்கு மலைத்தொடரில் கொல்லிமலையில் ஐயாறு 300 அடி உயரத்தில் இருந்து விழுகிறது. இங்கு செல்ல நாமக்கல்லில் இருந்து 55கி.மீ தொலைவில் 70 கொண்டை ஊசி வளைவுகள் வழியாக அரப்பளீஸ்வரர் கோவில் வரவேண்டும். அதன்பின் 1196 படிகள் மூலம் இறங்கியே இப்பகுதிக்கு செல்லவேண்டும். அழகான இப்பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் படை எடுத்து வருகின்றனர்.

இப்பகுதிக்கு குறுகிய படிகள் வழியாகவே செல்ல வேண்டிய நிலையில் முதியோர், குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் செல்ல இயலாத நிலையே உள்ளது. மழைகாலங்களில் சறுக்கும் ஆபத்து உள்ளதால் அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்தோடு இந்த அருவிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய சூழலில் சுற்றுலாப் பயணிகள் நலன்கருதி ஆகாய கங்கை அருவிக்கு செல்ல வசதியாக ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த 23.4.2025 ல் சட்டமன்றத்தில் அப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர். ராஜேந்திரன் அறிவித்தார்.

ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த பிரபல டோபுள் மேயர் நிறுவனம் ரோப்கார் திட்டத்தினை அமைக்க தயாராக இருப்பதாகவும், தனியார் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். இதனால் சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் ஆபத்து நீங்கும் என்பதுடன் எளிதில் குறிப்பிட்ட பகுதிக்கு எல்லா தரப்பினரும் செல்ல இயலும் என்பதால் இத்தகைய திட்டத்திற்கு மக்கள் வரவேற்பு அளித்தனர். ஆனால் அறிவிக்கப்பட்ட ஆகாய கங்கை ரோப்கார் திட்டம் அறிவிப்பாகவே இருக்கிறதே தவிர செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

மத்திய அரசின் தேசிய ரோப்வே மேம்பாட்டு திட்டம் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்கள், புனித தலங்கள் ஆகியவற்றில் ரோப்கார் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 2025/நவம்பரில் பார்வத்மலா திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை, ஊட்டி உள்ளிட்ட 6 இடங்களை தேர்வு செய்து DPR (Detailed project Report) தயாரிக்க உத்தரவிட்டு உள்ளது. இப்பட்டியலில் நாமக்கல் ஆகாய கங்கை இடம்பெறவில்லை. இதனால் கொல்லிமலை திட்டம் கண்டுகொள்ளப்படாத நிலையில் முடங்கி உள்ளது.

இயற்கை அழகுமிக்க ஆகாய கங்கை அருவிக்கு செல்வோரின் பாதுகாப்பை உறுதிபடுத்திடும் வகையில் இங்கு உறுதியான கைப்பிடிகளுடன் கூடிய வசதியான படிகள், இடைப்பட்ட பகுதியில் ஓய்வு மையம், கண்காணிப்பு வசதி, முதல் உதவி மையம், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்திட வேண்டும். அரிய தாவரங்களும், பல்லுயிர்களும் கொண்ட இப்பகுதிக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். சுற்றுலா பயணிகள் நலன் கருதியும், சுற்று சூழலை காக்கும் வகையிலும் இப்பகுதியில் ரோப்கார் திட்டத்தை முன்னுரிமை அளித்து தமிழக அரசு செயல்படுத்திட வேண்டும்.

ஆகாய கங்கை ரோப்கார் திட்டம் ஏன் இன்னும் தொடங்கவில்லை?
கொல்லிமலை சுற்றுலாவுக்கு ரோப்கார் திட்டம் அவசியமா?
நாமக்கல் ஆகாய கங்கை திட்டம் அறிவிப்பிலேயே முடங்கியது
சுற்றுலாப் பயணிகளுக்காக ரோப்கார் திட்டம் எப்போது?
ஆகாய கங்கை அருவிக்கு பாதுகாப்பான பயணம் எப்போது சாத்தியம்?
கொல்லிமலை ரோப்வே திட்டத்தை விரைவுபடுத்த கோரிக்கை
நாமக்கல் சுற்றுலா வளர்ச்சிக்கு புதிய திட்டம் தேவை
ஆகாய கங்கை அருவி: அடிப்படை வசதிகள் எப்போது மேம்படும்?
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவிக்கான ரோப்கார் திட்டம் அறிவிக்கப்பட்டும் இதுவரை செயல்பாட்டுக்கு வராததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். முதியோர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாக அருவியை அணுகும் வகையில் ரோப்கார் திட்டத்தையும் அடிப்படை வசதிகளையும் தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *