சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

பாதசாரிகள் இறப்பை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

பாதசாரிகள் உயிரிழப்பை தடுக்க பாதுகாப்பான நடைபாதை மற்றும் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள்

இந்தியாவில் அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.இதில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அடுத்தபடியாக பாதசாரிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் கடந்த 2003 ல் 67,213 விபத்துக்கள் நடைபெற்ற நிலையில் இதில் 18,347 உயிரிழப்புகள் நடந்து உள்ளது. இதில் 4577 பேர் பாதசாரிகள். கடந்த 2024 ல் சாலை விபத்துக்கள் 67,526 நடைபெற்ற நிலையில் இதில் 18,449 உயிரிழப்புகள் நடந்து உள்ளது. இதில் 4176 பேர் பாதசாரிகள். இதுபோல் விபத்துக்களில் கடுமையான காயம், ஊனம் அடைந்தவர்களின் பாதசாரிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

வாகனம் அதிவேகம், பாதசாரிகளுக்கான உள்கட்டமைப்பு இல்லாமை, வாகன பராமரிப்பு இன்மை, விழிப்புணர்வு இல்லாதது, வேகமான நகரமயமாதல், வாகன அதிகரிப்பிற்கு ஏற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் போதாமை என விபத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் இழப்புகள் மற்றும் பாதிப்புகள் என்பது ஒவ்வொரு பாதசாரிகளும் தவிர்க்க இயலாததாகவே உள்ளது. அரசு பாதசாரிகள் செல்ல உரிய வசதிகளை ஏற்படுத்தாத நிலையில் வாகனங்களும் உரிய நடைமுறைகளை அமல்படுத்தாத நிலையில் சாலையில் செல்வது உயிரை பணயம் வைத்து செல்லும் அவலத்தையே நாம் சந்தித்து வருகின்றோம்.

சாலை விபத்துக்களை தவிர்க்கும் நோக்கத்தில் ஸ்வீடன் நாட்டில் 1997 ல் Vision zero என்னும் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. மனித உயிரும், ஆரோக்கியமும் பொருளாதாரம், வசதி உள்ளிட்ட வேறு எவ்வித பலனுக்கும் பலியாகக் கூடாது என்ற அடிப்படையில் உருவான இத்திட்டம் நெதர்லாந்து, நார்வே, ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க், ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவியது. பாதுகாப்பான வேகம், பாதுகாப்பான சாலைகள், பாதுகாப்பான வாகனம், பாதுகாப்பான சாலை உபயோகிப்பாளர் என்பவை படி வேக வரம்புகளை குறைத்தல், பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு முன்னும் அளித்தல், சாலைகளை மறுவடிவமைத்தல் இதன் முக்கிய செயல்பாடுகள் ஆகும்.

உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு இவ்விவகாரம் தொடர்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நடைபாதையில் நடப்பது அடிப்படை உரிமை எனவும் சாலை இருந்தால் அதனுடன் பாதுகாப்பான அடையாளப்படுத்தப்பட்ட நன்கு பராமரிக்கபட்ட நடைபாதை இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. மேலும் நடைபாதை இல்லாமல் இருந்தாலோ, மோசமாக பராமரிக்கப்பட்டாலோ மக்கள் சாலையில் நடக்க நேர்ந்து ஏற்படும் விபத்துகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளே பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. இது இந்திய அரசியமைப்பின் Article 21 ( வாழ்க்கை உரிமை) மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாப்பதோடு நடைபாதை விபத்துக்களை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் வழிவகுக்கிறது.

பாதசாரிகளின் அடிப்படை உரிமையினை பாதுகாக்கும் வகையில் அனைத்து நகர்புற மற்றும் ஊரக சாலைகளிலும் தடையற்ற போதுமான அகலமான நடைபாதைகளை உருவாக்கிட வேண்டும். மருத்துவமனை, சந்தை, பள்ளி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதசாரிகள் சாலையினை கடக்க உரிய ஏற்பாடுகள், வாகனங்கள் வேகத்தை கட்டுபடுத்த கடுமையான நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரச்சாரம், தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்விஷயத்தில் 4E அணுகுமுறையான உட்கட்டமைப்பு, சட்ட அமலாக்கம், விழிப்புணர்வு, அவசர கால உதவி. ஒருங்கிணைத்து செயல்படுத்தி பாதசாரிகளின் உரிமையினை காப்பதோடு இனியொரு இறப்பு ஏற்படாமல் தடுத்திட வேண்டும்.

பாதசாரிகள் உயிரிழப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாட்டில் பாதசாரிகள் பாதுகாப்பு ஏன் முக்கியம்?
நடைபாதை இல்லாமை உயிரிழப்புக்கு காரணமா?
சாலை விபத்துகளில் பாதசாரிகள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?
பாதுகாப்பான நடைபாதைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
Vision Zero கொள்கையை தமிழ்நாடு செயல்படுத்த வேண்டுமா?
பாதசாரிகள் உரிமையை பாதுகாக்க அவசர நடவடிக்கை தேவை
சாலை பாதுகாப்பில் புதிய மாற்றங்கள் அவசியம்
உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் பாதசாரிகள் பாதுகாப்பு கேள்விக்குறி
சாலை விபத்துகளை குறைக்க 4E அணுகுமுறை அவசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *