சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது –
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியில் கடந்த 26.2.1900 ல் பிறந்த ஜே.சி.டேனியல் திருவனந்தபுரத்தில் கல்லூரி கல்வியினை முடித்தார். பழந்தமிழர் தற்காப்பு கலையான களரியில் திறமைசாலியாக இருந்த இவர் தனது 15வது வயதில் Indian Art of Fencing and Sword play என்னும் ஆங்கில நூலை எழுதினார். பல்மருத்துவராக பணியாற்றியவர் சினிமா மீதான ஆர்வத்தால் சென்னை, பம்பாய் சென்று திரைப்பட நுட்பங்களை கற்றார். 1926ல் திருவாங்கூர் நேஷனல் பிக்சர்ஸ் என்னும் கேரளாவின் முதல் திரைப்பட ஸ்டுடியோவினை திருவனந்தபுரம் – பட்டம் பகுதியில் நிறுவினார்.
1928ல் விகதகுமாரன் என்ற முதல் மலையாள முழுநீள மௌன திரைப்படத்தை தயாரித்து இயக்கினார். இதில் தயாரிப்பு, இயக்கம், கதை, ஒளிப்பதிவு, தொகுப்பு, கதாநாயகன் ஆகிய அனைத்து பணிகளையும் தானே மேற்கொண்டார். சமூக யதார்த்தத்தை அடிப்படையாக கொண்ட இதுவே முதல் மலையாளப்படமாகும். படத்தில் P.K.ரோசி என்னும் தலித் கிறிஸ்தவ பெண் நாயகியாக நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பட வெளியீட்டின் போது சாதி இந்துக்கள் திருவனந்தபுரம் கேபிடல் தியேட்டரில் கலவரம் செய்தனர். ரோசியின் வீடு தீவைத்து எரிக்கப்பட்டது. இதனால் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன்சுமை அதிகரித்ததால் ஜே.சி.டேனியல் தனது சொத்துக்களை விற்றார். இளம் கலைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.
இதன் பின் சென்னைக்கு சென்று பல்மருத்துவ தொழிலைத் தொடர்ந்தவர் தனது இறுதி காலங்களில் அகஸ்தீஸ்வரத்தில் வாழ்ந்து கடந்த 27.4.1975 அன்று மறைந்தார். 2013ல் செல்லுலாய்டு என்ற மலையாளப்படம் இவரது வாழ்க்கையினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. ஜே.சி.டேனியல் தமிழ் வேர்க்காரர் என்பதால் அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படாமல் இருந்தது. 1991ல் அவரது பங்களிப்பை போற்றும் விதமாய் கேரளா அவரை மலையாள சினிமாவின் தந்தை என்ற பட்டம் அளித்து பெருமைபடுத்தியது. 1992 முதல் கேரள அரசு ஜே.சி.டேனியல் விருது என்ற உயரிய வாழ்நாள் சாதனை விருதினை வழங்கி வருகிறது. இது மலையாள சினிமாவின் உயரிய விருதாகும்.
19.6.26 அன்று நடைபெற்ற கேரள மாநில பட்ஜெட் கூட்டத்தில் முதல்வர். வி.டி.சதீஷன் தலைமையிலான அரசு ரூ 100 கோடி ஒதுக்கீடு செய்து ஜே.சி.டேனியல் இன்டர்நேஷனல் பிலிம் சிட்டி (சித்ர நகரம்) என்னும் திரைப்பட நகரத்தினை கொச்சியில் அமைப்பதாக அறிவித்து உள்ளது. சினிமாவினை தொழிலாக அங்கீகரித்து உள்கட்டமைப்பு மேம்படுத்திடவும், International Film Festival of Kerala (IFFK) போன்ற திரைப்பட விழாக்களுக்கு நிரந்தர இடமாகவும், அனைத்து வசதிகள் உள்ளிடக்கிய படப்பிடிப்பு தளமாகவும் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச தரத்தில் அமைய உள்ள குறிப்பிட்ட பிலிம் சிட்டி நகரத்திற்கு ஜே.சி.டேனியல் பெயர் சூட்டி உள்ளது மிகவும் வரவேற்கதக்கது. விருது அளவில் அவரது நினைவை சுருக்கி கொள்ளாமல் நீண்டகால உள்கட்டமைப்பு திட்டத்திற்கு அவரது பெயரை இடம்பெற செய்ததின் மூலம் அவரது புகழை நிலைநாட்டும் விதமாய் கேரள அரசு செயல்பட்டு உள்ளதாக கருதுகின்றோம். இதன் மூலம் தமிழ் – மலையாள கலாச்சார தொடர்புகள் மேலும் மேம்படும். கேரள திரைஉலகம் நல்ல வளர்ச்சி கண்ட போதிலும் அதன் தொடக்க புள்ளியாக இருந்தவரை நினைவு கூறும் இச்செயல்பாடுக்கு தமிழக மக்கள் சார்பில் கேரள அரசுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.












Leave a Reply