சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் கடலுக்குள் 18கி.மீ தொலைவில் ரூ425 கோடி செலவில் 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் (HOEC) கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்து உள்ளது. காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம், புதுக்கோட்டை கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகள் கடந்த 2020ல் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எரிவாயு உற்பத்தி திட்டங்களுக்கு இதன்படி தடை விதிக்கப்பட்ட நிலையில் இம்மண்டலத்தை ஒட்டிய பகுதியில் குறிப்பிட்ட திட்டத்தினை செயல்படுத்திட மத்திய அரசால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
வங்கக்கடலில் குறிப்பிட்ட ஹைட்ரோகார்பன் திட்டம் நிறைவேற்றப்படுமானால் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மாங்குரோவ் காடுகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும். கிணறு தோண்டுதல், அதன் சத்தம், எண்ணை கசிவு உள்ளிட்டவற்றால் மீன்கள், ஆமைகள், பவளப்பாறைகள் அழியும் நிலை உள்ளது. ஆயிரக்கணக்கான மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித்தொழில் கடுமையாக பாதிக்கப்படுவதோடு மீன் குறைவால் வருமான இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
கடலின் உள் பகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டம் என்றபோதிலும் எண்ணை கசிவு மூலம் மாசுபாடு கரைக்கு பரவி நிலத்தடி நீர், மண்வளம் பாதிக்கப்படும் அவலம் உள்ளது. கடலூர் பகுதியில் செயல்பட்டு வரும் சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்கனவே மாசுபாடு ஏற்பட்டு உள்ள நிலையில் இத்திட்டத்தின் மூலம் மேலும் சுற்றுசூழல் அழுத்தத்தால் பாதிப்புகள் பெருகும் சூழலே உள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மண் மலட்டுதன்மை ஏற்படுவதும் நிலத்தடி நீர் தரம் பாதிக்கப்படுவதும், பல்வேறு நோய்கள் உருவாவதும் தவிர்க்க இயலாதது.
இவற்றின் மீத்தேன் உமிழ்வு, கார்பன் உமிழ்வு அதிகரிப்பால் காலநிலையில் தாக்கம் ஏற்பட்டு அதன்மூலம் பல்வேறு இழப்புகளையும், இன்னல்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்படுவர் . தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் உள்ள 1076 கி.மீ கடற்கரையில் பல்வேறு திட்டங்கள் மூலம் கடலோரப்பகுதி மக்கள் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்படும் நிலையில் இத்தகைய திட்டத்தால் கடலின் காவலர்களான மீனவர்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதிப்பு அடையும் நிலையினையே எதிர்நோக்கி உள்ளோம்.
எனவே கடல்சூழலுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும், மடல் காடுகள் எனப்படும் அலையாத்தி காடுகள் அழிவிற்கும், மீன்பிடித்தொழில் பாதிப்பிற்கும் காரணமான ஹைட்ரோகார்பன் திட்டத்தை கடலூர் பகுதியில் செயல்படுத்திட தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது. கடலின் மடியில் உயிர் வாழும் கடற்புற்கள், பவளப்பாறைகள் பாதிப்பிற்கும், உலக அளவில் தற்போது எதிர்நோக்கி உள்ள காலநிலை மாற்றம், புவிவெப்பமயமாதல் உள்ளிட்ட காரணிகளுக்கும் காரணமான நாசகார இத்திட்டம் மக்கள் வாழ்வை கேள்விக்குறியாக்கிடும் நிலையில் அதற்கு இடம் அளிக்காமல் அழிவுகள் உருவாகும் முன் ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply