சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் சுமார் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டு உள்ளது. 4/5/7/10 வது மாடிகளில் உள்ள அலுவலகங்களில் இத்திருட்டு நடைபெற்று உள்ளது. இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். CCTV கேமராக்கள் இல்லாத இடங்களில் நடைபெற்ற இத்திருட்டு சம்பவத்தால் இது மேலும் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
கடந்த 2021- 23 ஆண்டில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்த போது ரூ 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டன. டெண்டர்களில் கார்ட்டல் மயமாக்கல் அதிக விலை கொடுத்து வாங்கியது, முறைகேடான ஒப்பந்தங்கள் ஆகியவை மூலம் அரசுக்கு ரூ 397 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு சமீபத்தில் உத்தரவிட்டது. இக்குற்றச்சாட்டில் தொடர்பு உடைய ஆவணங்கள் ஹார்டு டிஸ்குகளில் இருந்ததாக தெரிகிறது.
தமிழ்நாடு மின்வாரியத்தின் பொருள் மேலாண்மைப் பிரிவில் உள்ள நிலக்கரி கொள்முதல் தொடர்பான ரகசிய தகவல்கள், அதிக விலை கொள்முதல், தரமற்ற நிலக்கரி, தரகர்கள் தலையீடு இவற்றிற்கான ஆதாரங்கள் இந்த ஹார்டு டிஸ்கில் இருந்ததாக கூறப்படுகிறது. டெண்டர்கள், கொள்முதல், ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் நடைபெற்ற முறைகேடுகளை மூடிமறைக்கும் விதமாகவே இத்திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளது எனவும் ஹார்டுடிஸ்குகள் திருட்டு மூலம் ஊழல் ஆதாரங்களை அழிக்கும் சதி நடப்பதாகவும் சந்தேகம் எழுகிறது.
விஜிலென்ஸ் அதிகாரிகள் பலமுறை கண்காணிப்பு கேமராக்களை அலுவலகத்தில் பொருத்திட வலியுறுத்தியும் துறைசார்ந்த அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்து உள்ளனர். இடைத்தரகர்கள் அடிக்கடி இங்கு வந்து டெண்டர், கொள்முதல் மற்றும் ஒப்பந்த முறைகேடுகள் செய்ய உதவியதாக கூறப்படும் நிலையில் அவர்கள் வருகையினை பதிவு செய்யாமல் இருக்கவே கேமராக்கள் பொருத்துதலை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
தமிழக மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மின்வாரிய ஊழலுக்கு எதிரான எச்சரிக்கையினைத் தொடர்ந்து சில நாட்களில் இத்திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது. இச்சம்பவத்தின் மூலம் மின்வாரியத்தில் நீண்டகாலமாக இருந்து வரும் பாதுகாப்பு மற்றும் ஊழல் தொடர்பான பிரச்னைகள் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்துவதோடு இதன் பின்னணியில் தொடர்பு உடைய அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply