சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கடந்த 1956 ல் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் அமலான போது சென்னை மாகாணம் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டது. தமிழ்பேசும் பகுதிகள் தமிழ்நாடாக உருவானாலும் தமிழர் பெரும்பான்மையாக உள்ள சிலப்பகுதிகள் நமது அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. இதன்படி தேவிகுளம், பீர்மேடு, மூணாறு, பாலக்காடு மாவட்டத்தில் சில பகுதிகள், செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட சில பகுதிகள் கேரளாவிற்கு சென்றது.சித்தூர், புத்தூர், நகரி, ஏகாம்பரம், குப்பம் போன்ற பகுதிகள் ஆந்திராவுடனும் சில பகுதிகள் கர்நாடகாவுடனும் இணைப்பிற்கு உள்ளானது.
இதனால் தமிழகம் சுமார் 70,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை தனது அண்டை மாநிலங்களிடம் இழந்து உள்ளது. இதனால் காவிரி, முல்லைபெரியாறு, பாலாறு, காவிரி உள்ளிட்ட தொடரும் நதிநீர் பிரச்னைகளுக்கு இது காரணமாகிப்போனது. பெரும்பாலான நீர் மற்றும் வனவளம் இதனால் நம்மிடம் இருந்து பறிபோனது. இதற்கென பல்வேறு தலைவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்து தற்போதுள்ள பகுதியினை மீட்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்கள் கேரளாவிற்கு செல்லும் நிலையிலும் நெய்யாறு இடதுகரை கால்வாயில் இன்றுவரையில் தண்ணீர் விட மறுக்கும் சூழலே நீடித்து வருகிறது.
இது ஒருபுறமிருக்க மறுபுறம் தற்போது உள்ள தமிழக நிலப்பரப்பையும் அபகரிக்கும் நோக்கில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2017ல் கேரள அதிகாரிகள் தமிழக எல்லைக்குள் 200 மீட்டர் நுழைந்து எல்கை பலகை வைத்தனர். இதேபோல் கடந்த 2022 மற்றும் 2023ல் மீண்டும் நீலகிரி மாவட்ட பகுதியில் அத்துமீறல்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக கூடலூர் வட்டம் பந்தலூர் அருகே தாலூர் பகுதியில் இம்மாதம் தமிழக எல்கைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழ் அறிவிப்பு பலகையை அகற்றி விட்டு கேரள அரசு புதிதாக Welcome to kerala என்னும் பலகையை நாட்டி உள்ளது.
இது போன்ற எல்கை அத்துமீறல் சம்பவங்கள் தேனீ, குமரி, கோவை மாவட்ட எல்லைப் பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநிலங்களுக்கு இடையிலான நட்புக்கும், மக்கள் ஒற்றுமைக்கும் ஊறு விளைவிப்பதாகவே உள்ளது. வன மற்றும் வருவாய் நிலங்கள் ஏனைய அரசுகளால் அடிக்கடி அளவீடு என்னும் நோக்கில் தனதாக்கும் முயற்சிகள் நடக்கிறது.
கேரளா அரசின் டிஜிட்டல் சர்வே காரணமாக தமிழக எல்கையோரப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களின் நிலங்கள் பறிபோகும் சூழல் உள்ளதாக இப்பகுதி மக்கள் கருதுகின்றனர். எனவே நீடித்து வரும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முடிவு காணும் வகையில் இருமாநில அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்தி எல்லைப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிந்த போதும் தேசத்தால் நாம் ஒன்று என்ற ஒற்றுமை உணர்வோடும், மக்கள் உரிமை, சுதந்திரம், நலன் பாதுகாக்கப் பட நிரந்தர தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply