சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தொழிற்சாலை கழிவுகளால் சேலம் மாவட்ட நிலத்தடி நீர் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

சேலம் மாவட்டத்தில் தொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்ட நீர் மற்றும் அதன் விளைவுகள்

மத்திய நிலத்தடி நீர் வாரியம் மற்றும் தமிழ்நாடு நீர்வளத்துறையின் 2025 அறிக்கையின் படி சேலம் மாவட்டம் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளதால் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது.இம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சாயப் பட்டறை, ரசாயன ஆலை,பூச்சிக்கொல்லி மருந்து ஆலைகள் இவற்றில் இருந்து வெளிவரும் கழிவுகள் இங்குள்ள காவிரி ஆற்றின் கிளை ஆறுகளான திருமணிமுத்தாறு, வசிஷ்டா, சரபங்கா ஆகியவற்றில் கலந்து அவற்றை மட்டுமில்லாது நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றன. அப்ரால் கிங்டம் என்ற ரசாயன ஆலையின் கழிவுகளால் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், மீன்கள் செத்து மிதப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சேலம் மாநகரப்பகுதி மற்றும் ஆத்தூர், ஓமலூர், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளின் கழிவுநீர் நேரடியாக ஆறுகளில் விடப்படுவதாகவும், தொழிற்சாலைகளில் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இவற்றில் உள்ள குரோமியம், ஆர்சனிக் உள்ளிட்ட கன உலோகங்கள், நீரில் கலக்கும் குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசடைவதோடு மக்களுக்கு தோல், வயிறு, சிறுநீரகம், நுரையீரல் நோய்களை ஏற்படுத்துவதோடு புற்றுநோய் உருவாகும் அபாயமும் அதிக அளவில் உள்ளது.

விவசாய விளைநிலங்கள் உப்புசத்து அதிகரித்து விவசாயத்திற்கு பயனற்றதாக மாறி வருகிறது. நிலத்தடி நீர் மாசுபாட்டால் இங்கு விளைவிக்கப்படும் சோளம், கரும்பு, நெல், காய்கறிகள் உள்ளிட்ட பயிர்கள் கருகுவதோடு அவற்றின் வளர்ச்சி குறைந்து மகசூல் இழப்பு உருவாகிறது.சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலத்தடி நீர் ஆய்வுகளில் BOD/ COD/ TDS/கன உலோகங்கள் உள்ளிட்டவற்றின் அளவுகள் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக உள்ளன.

தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) திருமணிமுத்தாறு, வசிஷ்டா, சரபங்கா ஆறுகளில் மாசு ஏற்படுவதை தடைசெய்திடும் விதமாக CETP (Common Effluent Treatment plant) மற்றும் STP (Sewage Treatment plant) அமைத்திட உத்தரவிட்டது. ஆனால் இவை நிறைவேற்றப்படவில்லை. மாறாக புற்றீசல் போல் பெருகிவரும் பல்வேறு ஆலைகளும் கட்டுப்பாடு எதுவும் இன்றி தங்கள் பங்குக்கு கழிவுகளை விடுவதால் நிலம் மாசுபடுவதோடு நிலத்தடி நீரும் மாசுபட்டு வாழ தகுதியற்ற பகுதியாக மாறி வருகிறது.

நீர் மேலாண்மையினை சரிவர செயல்படுத்தாமலும், நீர்நிலைகளை புனரமைக்க போதிய அக்கறை காட்டாததாலும், இருக்கும் நீர்வளத்தை பேணி பாதுகாக்க நாம் தவறி வருவதாலும் பெரும்பாலான நீர்நிலைகள் கழிவுநீர் தேக்கமாக மாறிவருகிறது. அதுபோல் நிலத்தில் ரசாயன மாசு கலப்பாலும், நீரை புதுப்பிக்க தவறுவதாலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது.நிலத்தடி நீர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சேலம் மாவட்டத்தில் ரசாயன ஆலை மற்றும் நகர கழிவுகள் வெளியேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலைகளுக்கு zero Liquid Discharge (ZLD) கட்டாயபடுத்துவதோடு மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைபடுத்திட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *