சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

சேலத்தில் மாசுபாட்டால் பாழாகிப்போன புண்ணிய தலமான வசிஷ்ட நதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சேலம் மாவட்டத்தில் மாசடைந்த வசிஷ்ட நதி மற்றும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பு

சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து உருவாகி ஆத்தூர், தலைவாசல், காட்டுக்கோட்டை, தேவியாக்குறிச்சி போன்ற பகுதிகளை கடந்து சுமார் 90கி.மீ பயணித்து ஸ்வேதா நதியுடன் கலந்து வங்ககடலில் சங்கமிக்கும் வசிஷ்ட நதி வரலாற்று சிறப்புமிக்கதாகும். சப்தரிஷிகளில் ஒருவரும் ராமபிரானின் குருவுமான வசிஷ்ட முனிவர் இந்நதிக்கரையில் தவம் இருந்ததால் அவர் பெயரிலேயே இந்நதி அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆற்றூர், தலைவாசல், அரங்கலூரில் இந்த ஆற்றில் தடுப்பணைகள் உள்ளன. சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இந்த ஆற்றினை நம்பி உள்ளதோடு ஏராளமான கிராமங்களின் நீர் ஆதாரமாகவும் இந்நதி திகழ்கிறது.

வசிஷ்ட நதிக் கரையில் பேளூரில் தான்தோன்றீஸ்வரர் (நிலம்), ஏத்தாப்பூர் சாம்ப மூர்த்தீஸ்வரர் (நீர்), ஆத்தூர் கோட்டை காய நிர்மலேஸ்வரர் (நெருப்பு),அறகளூர் காமாண்டீஸ்வரர் (காற்று). கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் (ஆகாயம்) என பஞ்சபூதத் திருத்தலங்கள் உள்ளதோடு பன்னிரு சிவத்தலங்களும் இந்நதி வழியில் தான் உள்ளன. இத்தகைய புண்ணிய தலங்களை இணைக்கும் வசிஷ்ட நதி விவசாயம், குடிநீர், சுற்றுசூழலுக்கு பெரும் பங்காற்றி வரும் நிலையில் நமது நாட்டில் மாசடைந்த 351 நதிகளில் முதன்மையானதாக வசிஷ்ட நதி உள்ளதாக மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது.

தொழிற்சாலை கழிவுகள், நகரின் கழிவுநீர், கட்டுமான இடிபாடுகள், உணவு மற்றும் இறைச்சி கழிவுகள் இங்கு கொட்டப்படுவதால் இந்நதி குப்பை கிடங்காக மாறிப் போனது. மேலும் நதியே தெரியாதவாறு ஆக்ரமித்த கருவேல மரங்கள் மேலும் இதன் இயல்பை அழித்து உள்ளதோடு சுற்றுசூழலுக்கும் தீங்கு விளைவிக்கின்றன. குறிப்பாக மணிவிழுந்தான் முதல் தியாகனூர் வரையிலான 10 கி.மீ தூரம் இந்நதி மிகவும் மாசடைந்து காட்சி அளிக்கிறது. கட்டுப்பாடு இன்றி இந்நதியில் அம்மம் பாளையம், பெத்தநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மணல் கொள்ளை நடந்துவருகிறது.

வசிஷ்ட நதியின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான கல்வராயன் மலையில் கருமந்துரை அருகே கைக்கான் வளைவு என்ற ஓடையில் ஏற்பட்ட தடை காரணமாக நீர்வரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனை சீரமைக்க பணிகள் நடைபெற்ற போதும் ஆனைமடுவு மற்றும் புழுதி குட்டை அணை உபரி நீரே இங்கு வரும் நிலை உள்ளதால் வசிஷ்ட நதி நீர்வரத்தின்றி வறண்டு காணப்படும் நிலையே உள்ளது. இதனால் இதனை நம்பி உள்ள விவசாயிகளும், கிராம மக்களும் நீர் தட்டுப்பாட்டால் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனை தவிர்க்கும் வகையில் மேட்டூர் அணை உபரி நீரை வசிஷ்ட நதியுடன் இணைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இருந்தும் இவர்களது கோரிக்கை கண்டு கொள்ளப்படாததால் தொடர்ந்து இப்பகுதி மக்கள் இன்னலை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை நிவர்த்தி செய்திடும் வகையில் புண்ணிய நதியான வசிஷ்ட நதியில் தொழிற்சாலை மற்றும் வீடுகளின் கழிவுநீர் கலப்பதை தடுப்பதோடு, ஆக்கிரமிப்புகளை, கருவேல மரங்களை அகற்றி நீர் ஓட்டம் தடையின்றி செல்லவும், நீர் ஆதார திட்டத்தினை செயல்படுத்திடவும் பணிகளை மேற்கொண்டு பாழடைந்த நதியினை மீட்டு எடுத்திட வேண்டும். நமது வேராக இருக்கும் நதிகளின் விலாசத்தை அழிப்பது தான் நாகரிக வளர்ச்சியா??

agriculture water crisis india
தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு திட்டங்கள்
polluted rivers tamilnadu
நதி மாசுபாடு மற்றும் தீர்வுகள்
சேலம் சுற்றுச்சூழல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *