சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
வாட்டி வதைக்கும் கோடை வெயிலால் நீர்நிலைகள் வறண்டு போனதோடு தாகத்தோடும், வெப்பத்தால் தவிப்போடும் மனிதர்கள் இருக்கும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இதன் தாக்கத்திற்கு தப்பவில்லை. இதனால் வனப்பகுதியில் உள்ள நீர் ஆதாரங்கள் வறண்டு புற்கள் மற்றும் தாவரங்கள் கருகியதால் வனவிலங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.
முதுமலை புலிகள் காப்பகம் அருகே மசினக்குடி பகுதியில் வறட்சியினால் உணவு மற்றும் நீரின்றி இறந்த நிலையில் ஆண் யானை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சிங்காரா, பொக்காபுரம், கல்லட்டி மலைப்பகுதியில் 3 யானைகள் உணவு மற்றும் நீரின்றி இறந்து உள்ளன. இதுபோல் புலிகள், சிறுத்தைகள், கரடிகள் நீர் மற்றும் இரை இல்லாமல் ஊருக்குள் புகும் நிலை உள்ளது. மான்கள், காட்டுமாடுகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உணவு மற்றும் நீர் தட்டுப்பாட்டால் இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
வனப்பகுதி ஆக்கிரமிப்பு, யானை வழித்தடங்கள் அழிப்பு, உணவு மற்றும் நீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வனவிலங்குகள் ஊருக்குள் வர நேரிடுகிறது. இதனால் மனித மற்றும் விலங்குகள் மோதலுக்கு காரணமாகிறது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வனவிலங்கு மோதலில் 685 பேர் உயிர் இழந்து உள்ளனர். அதில் யானைத் தாக்குதலால் மட்டும் 522 பேர் இறந்து உள்ளனர். 2025ல் மட்டும் 43 பேர் மரணம் அடைந்து உள்ளனர். வறட்சி இது போன்ற சம்பவங்களை அதிகரிக்கவே செய்யும்.
இம் மோதல் ஏற்படாமல் தடுக்க வனம், நீர் மற்றும் மனித வாழ்விடங்களுக்கு இடையே சமநிலை அவசியம் தேவை. அடையாளம் காணப்பட்ட 42 வழித்தடங்களை மீட்டு பாதுகாப்பதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும். வனப்பகுதியில் செயற்கை நீர்நிலைகள் மற்றும் குடிநீர் தொட்டிகளை அமைத்து தினமும் நீர் இங்கு விநியோகம் செய்திட வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
காடுகளின் காவலன் ஆன யானை மற்றும் பல்லுயிர்களும் பாதிக்காத வகையில் வறட்சியால் அவை இறந்துபோவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பது அவசர அவசியமானதாகும். வனப்பாதுகாப்பு, நீர் மேலாண்மை, மரம் நடுதலில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். காலநிலை மாற்றமும், சூழல் சீர்கேடும், இயற்கை வளங்கள் அழிவும் பல வகைகளில் நம்மை பாதிப்பிற்கு உள்ளாக்கும். இவற்றின் அழிவில் இருந்து நாம் மட்டும் தப்பிக்க முயல்வது தவறானது. வறட்சியின் கோரபிடியில் இருந்து வனவிலங்குகளை பாதுகாப்பது நம்மையே நாம் காப்பதற்கு ஒப்பானது.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply